அனுப்பர்பாளையம்: திருமுருகன்பூண்டி, திருமுருகநாத சுவாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். திருப்பூர் அடுத்த திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. தேர்த்திருவிழா கடந்த 8ம் தேதி கிராமசாந்தியுடன் துவங்கியது. திருமுருகநாதர், சுப்ரமணியர் தனித்தனியே வீற்றிருந்த இரண்டு தேர்களும் ஒரே நேரத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நேற்றிரவு நடந்தது. திருமுருகநாதர் தேர், நேற்று முன்தினம் இரவே கோவில் நிலையை வந்தடைந்தது. சுப்ரமணியர் தேர், பூண்டி பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தது. நேற்று மாலை 3.00 மணிக்கு மீண்டும் தேரோட்டம் நடந்தது. சுப்ரமணியர் தேரில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அரோகரா கோஷத்துடன் பக்தர்கள் தேரை இழுத்தனர். வீதிகளில் வலம் வந்து தேர் நிலையை அடைந்தது. இன்று (திங்கள்கிழமை) பரிவேட்டை, குதிரை சிம்ம வாகன காட்சி, தெப்பத்தேர் நடக்கிறது. நாளை (18ம் தேதி) சுந்தரர் வேடுபறி திருவிழா, 19ம் தேதி பிரம்ம தாண்டவ தரிசன காட்சி, 20ம் தேதி மஞ்சள் நீர் விழா இரவு மயில் வாகன காட்சி நடக்கிறது.