பதிவு செய்த நாள்
18
பிப்
2014
11:02
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசி மக தெப்பல் உற்சவத்தில், புஷ்ப பல்லக்கில் சுப்ரமணியர் சுவாமி அருள்பாலித்தார். விருத்தாசலம் விருத்தாம்பிகை, பாலாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மாசி மக பிரம்மோற்சவ விழா, கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ஆழத்து விநாயகர், சுப்ரமணியர், விருத்தகிரீஸ்வரர், தாயார், சண்டிகேஸ்வரர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு வீதியுலா நடந்தது. ஆறாம் நாள் விபச்சித்து முனிவருக்கு சுவாமி காட்சியளிக்கும் ஐதீக நிகழ்ச்சி, ஒன்பதாம் நாள் பஞ்சமூர்த்திகள் தனித்தனி தேர்களில் வீதியுலா, 10ம் நாள் மாசி மக உற்சவம், தீர்த்தவாரி நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று முன்தினம் பதினோராம் நாள் தெப்பல் உற்சவம், நகராட்சி நிர்வாகம் சார்பில் நடந்தது. இதனையொட்டி, காலை பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. இரவு 11:00 மணியளவில் நூற்றுக்கால் மண்டபத்தில் வள்ளி, தெய்வாணை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு மகா தீபாராதனை, அதனைத் தொடர்ந்து வீதியுலா நடந்தது. அதிகாலை 3:00 மணியளவில் அம்மன் திருக்குளத்தில் சுப்ரமணியர் சுவாமி புஷ்ப பல்லக்கில் உலா வரும் தெப்பல் உற்சவம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.