பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த தேவம்பாடி காளிபாளையம் கிராமத்திலுள்ள கோட்டை மாகாளியம்மன் கோவிலில் நோன்பு சாட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் இக்கோவிலில் நோன்பு சாட்டப்படும். அம்மனிடம் உத்தரவு கேட்டு, செவ்வாய் மற்றும் புதன் கிழமைகளில் திருவிழா நடைபெறும். இதற்காக ஒரு வாரம் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு விரதங்கள் அனுசரிக்கப்படும். இந்தாண்டு, இன்றும், நாளையும் திருவிழா நடைபெற உள்ளது. இன்று (25ம் தேதி) மாலை, ஊர் பெரிய கிணற்றிலிருந்து சக்தி கும்பம் எடுத்து வந்து ஸ்தாபனம் செய்யப்படும். நாளை (26ம் தேதி) காலை, பெண்களால் அம்மனுக்கு மாவிளக்கு எடுத்து வரப்படும். அம்மனுக்கு சிறப்பு அலங்கார அபிேஷகங்கள் நடத்தப்படும். அன்று பிற்பகலில், உருவாரம் எனப்படும் உருவபொம்மைகள் நேர்த்திக்கடனாக கோவிலுக்கு எடுத்து வந்து வைக்கப்படும். மாலையில், மகிஷாசுர மர்த்தினி அம்சமான அம்மனுக்கு, எருமைக்கிடா அலங்கரித்து கொண்டு வந்து படைக்கப்படும். நள்ளிரவு நேரத்தில், ஊரின் காவல் தெய்வமான முனியப்பச்சிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்படும்.