பழநி: பழநி மாரியம்மன் கோயில் மாசித்திருவிழாவின், முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. பழநி மாரியம்மன் கோயிலில் மாசித்திருவிழா நடந்துவருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. அதனைத்தொடர்ந்து தேரோட்டத்தை முன்னிட்டு நேற்று காலை அம்மன் பாதிரிப்பிள்ளையார் கோயிலில் எழுந்தருளித் தீர்த்தம் கொடுத்தல் நடந்தது. தேரடி தேர் நிலையில் இருந்து 4.30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது. தேரின் மீது பழங்களையும், நவ தானியங்களையும் பக்தர்கள் வீசினர். நான்கு ரத வீதிகளில் தேர் வடம் பிடித்தல் நடந்தது. மாலை 5.35 மணிக்கு தேர் நிலையை வந்தடைந்தது. இரவு 9 மணிக்கு வண்டிக்கால் பார்த்தலும், அதைத்தொடர்ந்து வையாபுரி குளத்து ரோட்டில், இரவு 10 மணிக்கு வாண வேடிக்கையும் நடந்தது. இன்று இரவு 10 மணிக்கு கொடியிறக்குதலுடன் மாசித்திருவிழா நிறைவுபெறுகிறது.