பதிவு செய்த நாள்
13
மார்
2014
10:03
பாலக்காடு: செம்பை சங்கீத உற்சவ நூற்றாண்டு நிறைவு விழாவின் இறுதி நாளான நேற்று, முன்னணி கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. பாலக்காடு அருகே, கோட்டாயி பார்த்தசாரதி கோவில் ஏகாதசி திருவிழா, கடந்த 8 ம் தேதி துவங்கியது. இதையொட்டி நடந்த செம்பை சங்கீத உற்சவ நூற்றாண்டு நிறைவு விழாவின், இறுதி நாளான நேற்று காலை, உஞ்சவிருத்தி பஜனை நடந்தது. செம்பை வைத்தியநாத பாகவதர் இல்லம் முன், சங்கீத ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து, முன்னணி கலைஞர்களின் பஞ்சரத்ன கீர்த்தனையும், மண்ணூர் குமாரனுண்ணி, சுகுமாரி நரேந்திர மேனன், மஞ்சு ஜயவிஜயன், டாக்டர் போள் பூவத்திங்கல் உள்ளிட்ட கலைஞர்களின் இசை நிகழ்ச்சிகளும் நடந்தன. செம்பை வைத்தியநாத பாகவதரின் பேத்தி, செம்பை அனன்யா நடத்திய வாய்பாட்டு நிகழ்ச்சியை அனைவரும் ரசித்தனர். மாலை 5 மணியளவில், புவனா ராமசுப்புவின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சி நடந்தது. ஜி.ராமநாதன், விஜய் ஜேசுதாஸ், ஏழுநுடுவி கோபாலகிருஷ்ணன் இசை நிகழ்ச்சிகளும், இரவு, ஜேசுதாஸ் மற்றும் ஜயன் ஆகியோரின் இசை நிகழ்ச்சிகளும் அடுத்தடுத்து நடந்தன. ஒரு வார ஏகாதசி உற்சவத்தில், மூலவருக்கு ஸ்ரீபூதபலி, பள்ளி வேட்டை, ஆராட்டு, மஞ்சள் நீராட்டு, திருவீதியுலா நிகழ்ச்சிகள் நடந்தன. விழாவில், திரளான பக்தர்கள், இசைப்பிரியர்கள் பங்கேற்றனர்.