பதிவு செய்த நாள்
15
மார்
2014
10:03
ராமேஸ்வரம்: கச்சச்தீவு அந்தோணியார் சர்ச் விழாவுக்கு, ஒரு பக்தர் ரூ.5 ஆயிரம் மட்டுமே, கொண்டு செல்ல அனுமதிக்கபடுவர் என, ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் தெரிவித்தார். கச்சத்தீவு அந்தோணியார் சர்ச் திருவிழா இன்றும், நாளையும் நடக்கிறது. இதில் பங்கேற்க, 2763 ஆண்கள், 535 பெண்கள், சிறுவர், சிறுமிகள் 134 பேர், 97 விசைப்படகுகளில் இன்று காலை செல்கின்றனர். இவர்களுக்கு ராமேஸ்வரம் பாதிரியார் சகாயராஜ் நேற்று, அடையாள அட்டை வழங்கினார். பாதிரியார் சகாயராஜ் கூறியதாவது: கச்சத்தீவு செல்லும் பக்தர்கள் கண்டிப்பாக, அரசு வழங்கிய அசல் அடையாள அட்டையை, அதிகாரிகளிடம் காட்ட வேண்டும். ஒரு பக்தர் ரூ. 5000 வரை கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவர். போதிய உணவு, குடிநீர் கொண்டு செல்ல வேண்டும். மார்ச் 16 ல் திரும்பி வரும்போது, தயிர் சாதம், தண்ணீர் பாட்டில் வழங்கப்படும், என்றார்.
பாதுகாப்பு ஏற்பாடுகள்: பக்தர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து, தமிழக கடலோரக்காவல் படை கூடுதல் டி.ஜி.பி., சைலேந்திர பாபு, ராமநாதபுரத்தில் கூறியதாவது: கச்சத்தீவுக்கு, படகுகளில் செல்லும் பக்தர்கள், பத்திரமாக பயணிக்க, லைப் ஜாக்கெட் வழங்கப்படும். சர்வதேச கடல் எல்லை வரை, பக்தர்களின் பாதுகாப்புக்கு 6 மரைன் படகுகள் செல்லும். நீரில் தத்தளிப்போரை மீட்க, மரைன் போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக, கடலோரக்காவல் எஸ்.பி.,க்கள் மனோகர், வனிதா நியமிக்கப்பட்டுள்ளனர். விழா முடிந்து, திரும்பும் பக்தர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்படும். தூத்துக்குடி சுகந்தி தேவதாசன் கடல்வாழ் ஆராய்ச்சி அறக்கட்டளை மூலம், குருசடைத்தீவு கடல் பகுதியில் மரைன் போலீசார் 20 பேருக்கு, ஸ்கூபா டைவிங் நீச்சல் பயிற்சி இன்றும், நாளையும் அளிக்கப்படவுள்ளது, என்றார்.