பதிவு செய்த நாள்
15
மார்
2014
11:03
நாமக்கல்: நரசிம்மர் கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, மார்ச், 18ம் தேதி, கோட்டைச்சாலை, சேந்தமங்கலம் சாலையில், வாகன போக்குவரத்து, மாற்றுப்பாதையில் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும், என, ஆலோசனை கூட்டத்தில், நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி கூறினார். நாமக்கல் நகரில், பிரசித்தி பெற்ற நரசிம்மர் ஸ்வாமி கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டு தோறும் திருத்தேர் பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விழா, கடந்த, 10ம் தேதி திருக்கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை, 10 மணிக்கு திருமஞ்சனம், இரவு, 7 மணிக்கு, சிம்மம், அனுமந்தம், கருடன், சேஷ, யானை வாகனத்தில், ஸ்வாமி திருவீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.மார்ச், 18ம் தேதி திருத்தேர் பெருவிழா கோலாகலமாக நடக்கிறது. அன்று, காலை, 7.35 மணிக்கு, கோட்டை நரசிம்மர் திருத்தேர் வடம் பிடித்தல், மாலை, 4.35 மணிக்கு, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடக்கிறது.
தேர்த்திருவிழாவை முன்னிட்டு, பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் ஆலோசனை கூட்டம், நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலவலக கூட்ட அரங்கில், நேற்று நடந்தது.கலெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் நரசிம்மர் ஸ்வாமி கோவில் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, வடம் பிடித்தல் நிகழ்ச்சி, மார்ச், 18ம் தேதி சிறப்பாக நடக்கிறது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.திருத்தேர் வடம் பிடித்தல் அன்று, போலீஸார் காலை முதல் கோட்டை சாலை வழியாக செல்லும் வாகனங்களை, மாற்றுப்பாதையில் செல்வதற்கு ஏற்பாடு செய்வதோடு, மாலையில், சேந்தமங்கலம் சாலை வழியாக செல்லும் வாகனங்களையும், மாற்றுப்பாதையில் சென்று வர, உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல், தேவையான போலீஸாரை நியமனம் செய்து, அனைத்து பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தீயணைப்பு துறையினர், திருத்தேர்களை சுத்தம் செய்யும் பணியையும், பாதுகாப்பு கருதி தீயணைக்கும் வாகனங்களை ஏற்பாடு செய்ய வேண்டும். மேலும், சுகாதாரத்துறை அலுவலர்கள் தனி மருத்துவக்குழு நியமித்து, ஆம்புலன்ஸ் வாகனங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் மனோகரன், அறநிலையத்துறை உதவி ஆணையர் சபர்மதி, நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ஜெகதீஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.