பதிவு செய்த நாள்
15
மார்
2014
11:03
திருப்பூர், முதலிபாளையம் அருகே மாணிக்காபுரம் பிரிவில் கரிய காளியம்மன் கோவில் உள்ளது. 1,200 ஆண்டுகளுக்கு முன், பழமையான கல் கட்டுமான கோவிலாகும். சிவாலயங்களை அமைத்து வந்த சோழர்கள், முதன்முறையாக அமைத்த காளி கோவில் என்ற பெருமையை பெற்றது.
தல வரலாறு :
சோழ மன்னர் ஒருவர்,படை பரிவாரங்களுடன் ஆட்சி செய்து வருகிறார். நொய்யல் ஆற்றின் கரையில், "அமுக்கியம் என்ற நகரில், சிவாலயம் அமைக்க உத்தரவிடுகிறார்; கோவில் பணிகள் நடந்தன. அதனை பார்வையிட பரிவாரங்களுடன் வருகிறார். ஒவ்வொரு இடங்களிலும் இரவில் தூங்கும் போது, கனவில் அழகிய சிறு குழந்தை கரிய நிறத்துடன் வருகிறது.
ஒரு நாள் நொய்யல் ஆற்றில் குளித்து விட்டு, பூஜை செய்து விட்டு சிவாலயம் அமைக்கும் இடத்துக்கு வந்த போது, அங்குள்ள வீட்டில், கனவில் பார்த்த சிறுமியை, மன்னன் பார்த்தார். பின் தொடர்ந்து சென்று பார்த்த போது, குழந்தை, நாகலிங்க மரம் அருகே சிறிய கல்லை வைத்து பூஜை செய்து, மாயமாகி விட்டது.
அன்றைய இரவு, மன்னன் கனவில் வந்த குழந்தை, "மன்னனே, இதுவரை உன்னுடன் வந்தேன்; இனி வர இயலாது; கரியகாளியாக இங்கு எழுந்தருளியிருக்கிறேன் என கூறியுள்ளது. அக்குழந்தை வைத்து வழிபட்ட நாகலிங்க மரம், மறைந்த வீடு கோவிலாக அமைத்துள்ளதாக ஐதீகம். கால மாற்றத்தால் அமுக்கியம், என்ற பகுதி அழிந்து விட்டதாகவும், கோவில் மட்டும் மிஞ்சியதாகவும் கூறுகின்றனர்.
கோவில் சிறப்பு : முழுவதும் கற்களால் அமைக்கப்பட்டு, சுற்று பிரகார சுவர்களில் அழகான சிற்பங்கள், மனித மற்றும் விலங்குகளின் வாழ்வியலை விளக்கும் வகையில் சிற்பங்கள் அமைந்துள்ளன. கருவறைக்கு செல்லும் நிலவில் கஜலட்சுமி சிற்பங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. பெரிய யானைகள் இரு புறமும் உள்ளதோடு, அகலமான கல் நிலவு, பூ வேலைப்பாடுகளுடன் அமைந்துள்ளது.
அம்மன் சிறப்பு : நினைத்ததை நிறைவேற் றும் கரிய காளியம்மனாக எழுந்தருளியுள்ள அம்மன், பீடம், சிலை வித்தியாசமான அமைப்பில் உள்ளது. தலையில் தீக்குண்ட அமைப்பு உள்ளது. அதில், சூலாயுதமும் இடம் பெற்றுள்ளது. கையில் கீழே பார்த்தபடி சூலாயுதமும், இடது காலில் அரக்கனை மிதித்தவாறே அருள்பாலிக்கிறார். பத்மாசன அமைப்பில் அமர்ந்த நிலையில், வலது காலை மடக்கி வைத்தபடி அமர்ந்துள்ளார். தலையில் குண்டத்துடன் அமர்ந்துள்ள ஒரே கோவில் இது மட்டுமே.
உக்கிர காளியாக எழுந்தருளியிருந்தாலும், அம்மன் முகத்தில் சாந்தம் உள்ளது. ஒரு பகுதி சாந்த சொரூபியாகவும், மறு பகுதி ஆக்ரோஷமாகவும் அம்மன் காட்சியளிக்கிறார்.
அண்ணனும், தம்பியும்
வழக்கமாக கோவில்களுக்கு நுழையும் முன்பு இரு புறமும் உள்ள துவார பாலகர்களிடம் அனுமதி பெற்ற பின்னரே, மூலவரை தரிசிக்க முடியும். இங்கு சற்று வித்தியாசமாக, முன் மண்டபத்துக்குள் செல்வதற்கு முன், ஒரு புறம் விநாயகரும், மறுபுறம் முருகனும் எழுந்தருளி இருப்பதும் வித்தியாசமாக உள்ளது.
கோவில் எதிரில் பிரமாண்டமான தீபஸ்தம்பம் அமைக்கப்பட்டுள்ளது. நொய்யல் ஆற்றிலிருந்து கோவிலுக்கு வர படித்துறை அமைக்கப்பட்டுள்ளது.
கோவிலுக்கு முன் பகுதியில், பேச்சியம்மன் எழுந்தருளியுள்ளார். பெண் போன்ற முக அமைப்பும், பாம்பு போல் உடல் அமைப்பும் அழகாக அமைக்கப்பட்டுள்ளது. ஐந்து தலை நாகத்தின் அரவணைப்பில், கன்னிமார் எழுந்தருளியுள்ளனர். அருகில், காவல் தெய்வமான கருப்பணசாமிக்கு தனி சன்னதி உள்ளது. வில்வ மரம், அரச மரம், வேம்பு மரம், ஆல மரம் ஆகியன கோவில் வளாகத்தில் அமைந்துள்ளது.
கோவிலுக்கு முதலிபாளையத்திலிருந்து மாணிக்காபுரம்புதூர் செல்லும் டவுன் பஸ் 47 ஏ,பி,சி, 12 ஏ ஆகிய பஸ்கள் செல்லும்.