பதிவு செய்த நாள்
18
மார்
2014
11:03
புதுக்கோட்டை: பொன்னமராவதி அருகே, பிரசித்தி பெற்ற கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள், பல்வேறு பிரச்னைகள் தீரவும், நோய்களில் இருந்து நிவாரணம் பெறவும் அம்மனுக்கு வேண்டுதல் வைக்கின்றனர். வேண்டுதல் நிறைவேறியவுடன் பக்தர்கள், ஆண்டு முழுவதும் அம்மனுக்கு பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், ஆண்டுதோறும் பங்குனி மாதம் பூச்சொரிதல் விழாவும், பொங்கல் விழாவும் கொண்டாடப்படும். இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா, நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம், பொன்னமராவதி ஒன்றியத்துக்குட்பட்ட வேந்தன்பட்டி, மேலைச்சிவபுரி, வலையபட்டி, ஆலவயல், வேகுப்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் இருந்து, பக்தர்கள், அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்காக பலதரப்பட்ட பூக்களை கூடைகளில் ஊர்வலமாக சுமந்து வந்தனர். பலர் பால்குடம் எடுத்து வந்தனர். பக்தர்களுக்கு வழி நெடுகிலும், தனியார் பலர், நீர்மோர், பானகம், பிஸ்கட் போன்றவை வழங்கினர். நேற்று முன்தினம் இரவு முழுவதும், பல்வேறு ஊர்களில் இருந்து, மேள தாளத்துடன் பக்தர்கள் பாதயாத்திரையாக கோவிலுக்கு கொண்டு வந்த பூக்களும், பாலும் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. விழாவையொட்டி, பொன்னமராவதி அரசு போக்குவரத்துக் கழக டெப்போ சார்பில், கோவிலில் இருந்து, சுற்றுப்புற கிராமங்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. இது தவிர, திருச்சி போன்ற இடங்களில் இருந்து, பொன்னமராவதிக்கு வந்த தொலைதூர பஸ்களையும், கோவில் அருகே அமைக்கப்பட்ட தற்காலிக பஸ் ஸ்டாண்டுக்குள் அனுப்பி, பக்தர்களை ஏற்றிச் சென்றனர். இதனால், வெளியூர்களில் இருந்த வந்த பயணிகள் குறிப்பிட்ட நேரத்துக்கு செல்லமுடியாமல் அவதிப்பட்டனர்.