நத்தம் : நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருவிழா நிறைவு நாளில், அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நகர் உலா வந்தார். பக்தர்கள் மண்டகப்படி வைத்து சிறப்பு வழிப்பாடு செய்தனர்.நத்தம் மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு மார்ச் 3 ல் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. அதனைதொடர்ந்து பக்தர்கள் கரந்தன் மலை கன்னிமார் கோயில் தீர்த்தம் எடுத்து காப்புக்கட்டினர். மேலும் அம்மன் அலங்கரிக்கப்பட்ட கேடயம், சிம்மம், அன்னம் ஆகிய வாகனங்களில் நகர் வலம் வந்து அருள்பாலித்தார்.விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் பால்குடம், மாவிளக்கு, அக்கினி சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். விழா நிறைவு நாளான நேற்று முன்தினம் இரவு அம்மன் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பூப்பல்லக்கில் நகர் உலா வந்தார். சுற்றுவட்டார மக்கள் அம்மனை தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோயில் பரம்பரை பூஜாரிகள் சொக்கையா, சுப்புராசு, சின்னராசு, நடராசு மற்றும் செயல்அலுவலர் செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.