பதிவு செய்த நாள்
24
மார்
2014
11:03
காளையார்கோவில்: காளையார்கோவிலில், உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆனைமடு தெப்பக்குளத்தில், 30 ஆண்டுகளுக்கு பின் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. பல நூறு ஆண்டுகளுக்கு முன் தேவேந்திரனுடைய வெள்ளை யானை ஈஸ்வரனிடம் சாபம் பெற்றது. சாப விமோசனம் பெற ஊற்று தோண்டி சொர்ணகாளீஸ்வரரை வழிபட்டு வந்ததாக புராணங்கள் கூறுகிறது. இதுவே நாளடைவில் ஆனைமடு தீர்த்தமாக மாறியது. கடந்த 1870ல் ஏஎல். ஏஆர் கட்டளை சார்பில் ராமசாமி செட்டியார் 12 ஏக்கரில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் குளம் தோண்டினார். இவரது மகன் அருணாச்சலம் செட்டியார் படித்துறை, தடுப்புச்சுவர், 8 கி.மீ ., தொலைவிற்கு தண்ணீர் வருவதற்கான வரத்துக்கால்வாய், பெருகிய தண்ணீர் வெளியேறுவதற்கு போக்குமடைகளை கட்டியும், குளத்தின் நடுவே கலைநயத்துடன் மைய மண்டபம் அமைத்து பராமரித்து வருகின்றனர். சோமேஸ்வரர் - சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக விழாவின் 10 வது நாள் நிகழ்ச்சியாக, தெப்ப திருவிழா நடைபெறும். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் தண்ணீர் இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இதையடுத்து, பள்ளி மாணவர்கள், சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்தவர்கள் தானாக முன்வந்து, தெப்பக்குளத்தை தூர்வாரும் பணிகளில் ஈடுபட்டனர். தற்போது, காளீஸ்வர குருக்கள், சமுக ஆர்வலர் சண்முகம், ஊராட்சி தலைவர் அருள்ராஜ் ஆகியோர்களின் முயற்சியால், தெப்பக்குளம் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. தெப்பக்குளத்திற்கு வரும் வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், நீர் வரத்து குறைந்து விட்டது. ஆக்கிரமிப்பை அகற்றி, தடையின்றி குளத்திற்கு நீர் வர நடவடிக்கை எடுக்கவேண்டும்.