பேரூர் : வெள்ளிங்கிரி கோவிலுக்குச் சென்று திரும்பும் காவடி பக்தர்கள், பேரூர் கோவில் முன் குவிந்த வண்ணம் உள்ளனர். தென்கயிலாயம் என்றழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்கு, தமிழகம் உள்பட பல்வேறு வெளிப்பகுதியிலிருந்து தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். ஆண்டுதோறும், சித்திரை முதல் தேதியிலிருந்து சித்ரா பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், பூண்டி அடிவாரத்திலிருந்து ஏழு மலைகளைக் கடந்து கிரிமலையில் சுயம்புவாக வீற்றிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்து வருகின்றனர். தற்போது, மலையேறிவிட்டு திரும்பும் பக்தர்கள், பேரூர் கோவில் முன் காவடியுடன் திரளாக வருகின்றனர். மாட்டுவண்டி, வாகனங்களில் பூண்டியிலிருந்து புறப்படும் பக்தர்கள், பேரூர் கோவில் சுற்றுப்பகுதிகளில் உள்ள மண்டபங்களில் தங்கி, மறுநாள் காலை, பட்டீஸ்வரர் சுவாமியை தரிசிக்கின்றனர்.