பதிவு செய்த நாள்
01
ஏப்
2014
03:04
பாபா சற்றுநேரம், அந்த இளைஞனைக்கனிவோடு பார்த்துக் கொண்டிருந்தார். தந்தையைக் குழந்தை அதட்டுவது மாதிரி அவருக்குத்தோன்றியிருக்க வேண்டும். தயக்கமே இல்லாமல் தன்இருக்கையிலிருந்து எழுந்தார். நானாவலியைஅதில் அமர்த்தினார்.சிறிதுநேரம் பாபாவின் இருக்கையில் அமர்ந்திருந்த நானாவலி, பிறகு இருக்கையை விட்டு எழுந்தான். பாபாவை மீண்டும் அவரது இருக்கையில் அமருமாறு வேண்டினான். பிறகு, பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்கரித்துவிட்டுச் சென்றுவிட்டான்!தம் ஆசனத்தில் மறுபடி அமர்ந்துகொண்ட பாபா,கடகடவென்று நகைத்தார்.கூடியிருந்த பக்தர்கள் இந்த நிகழ்ச்சி எதை உணர்த்துகிறது என்று மனத்தில் ஆராய்ந்தார்கள். பாபாவின் லீலைகள்ஒவ்வொன்றுக்கும் ஓர்உட்பொருள் இருக்குமே? மனிதர்கள் தங்கள் பதவி ஆசை, நாற்காலி ஆசை போன்றவற்றை எந்நேரத்திலும் துறக்கத் தயாராக இருக்க வேண்டும் என்பதை பாபா உணர்த்துகிறாரா? தம் பக்தர்களின் ஆசையை நிறைவேற்றுவதற்காகத் தாம்எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் இறங்கிவரத் தயார் என்று அறிவிக்கிறாரா?எது எப்படியிருந்தாலும் ஒன்று மட்டும்பக்தர்களுக்குப் புரிந்தது. ஆன்மிகவாதிகளில், சிலர்செல்வச் செருக்கோடும் அகங்காரத்தோடும்இயங்குகிறார்களே! அவர்களைப் போன்றவர்அல்ல பாபா. உண்மையிலேயே பதவி ஆசைஉள்ளிட்ட எந்த ஆசையும் அற்ற தூய துறவி அவர் என்பதை உணர்ந்து பக்தர்கள் நெகிழ்ந்தார்கள்.
பாபாவின் பக்தர்கள், அவரைத் தங்கள் விருப்பம்போல் கொண்டாடினார்கள். அதற்கு பாபா அனுமதி அளித்திருந்தார். சிலர் அவர் முன் அமர்ந்து பக்திப் பாடல்களைப் பாடுவார்கள். ஒருசிலர் இசைக்கருவிகளை வாசிப்பார்கள். பலர் மெய்மறந்து, தியானத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.வேறு சிலர் அவருக்குச் சாமரம் வீசுவார்கள். பாபாவை, ராமபிரானின் அவதாரமாகவே சில அடியவர்கள் கருதுவதும் உண்டு. ராமனுக்குப்பட்டாபிஷேக வைபவத்தின் போது, லட்சுமணனும் சத்துருக்கனனும் கவரி வீசி சேவை புரிந்ததுபோலவே, தாங்கள் பாபாவுக்கு விசிறி வீசுவதாக நினைத்து அவர்கள் ஆனந்தம் அடைவதுண்டு. தங்கள் வீட்டில் செய்த உணவுப் பொருளையும் கல்கண்டு, திராட்சை போன்றவற்றையும் பாபாவுக்கு நிவேதனமாகக் கொண்டு வருபவர்களும் உண்டு.பக்தி உணர்வின் மேலீட்டால் எல்லாவகைப்பட்ட ஆனந்தங்களையும் பக்தர்கள் அடைவதற்கு பாபா வழிவகுத்திருந்தார். எதற்கும் தடை சொன்னதில்லை, ஒன்றே ஒன்றைத் தவிர. தமது பாதங்களை பக்தர்கள் தண்ணீரால் கழுவுவதற்கும், தமக்கு மங்கள ஆரத்தி எடுப்பதற்கும் அனுமதித்திருந்த பாபா, யாரேனும் தம் நெற்றியில் சந்தனம் பூச வந்தால் மட்டும், சிரித்தவாறே தவிர்த்து விடுவார். பாபாவின் தீவிர அடியவரான மகல்சாபதி மட்டும், பாபாவின் கழுத்தில் சந்தனம் பூச அனுமதிக்கப்பட்டிருந்தார். மற்றபடி, பாபாவின் நெற்றியில் யாருமே சந்தனம் பூசியதில்லை.பாபா ஏன் அதை அனுமதித்ததில்லை என்பதற்கு என்ன காரணம் கூற முடியும்? அதெல்லாம்,பாபா மட்டுமே அறிந்த பரம ரகசியம்.
ஒருவேளை பாபா சிவனின் அவதாரம் தானோ? தமது நெற்றிக் கண்ணின் சூடு, சந்தனத்தால்குளிர்ச்சி அடைவதை அவர் விரும்பவில்லையோ? மண்ணுலகின் கீழான தீமைகளைச் சுட்டெரிக்க அவதரித்த அவருக்கு, தம் செயல்பாட்டுக்காக நெற்றிக் கண்ணின் உஷ்ணம் தேவைப்பட்டதோ? அந்த ரகசியங்களை எல்லாம் யாரறிவார்?ஆனால், அன்று அது நிகழ்ந்தது. அதுவரை யாரும் காணாத அபூர்வக் காட்சி. பாபாவின்நெற்றியில் சந்தனம் பூச அவர் அனுமதித்த,அதுவரை நடவாத விந்தையான சம்பவம்....டாக்டர் பண்டிட் என்பவர், பாபாவை முதல்முறையாக தரிசிப்பதற்காக ஷிர்டி வந்தார். பாபாவைக் கீழே விழுந்து வணங்கியபின், மசூதியில் பாபாவின் திருமுகத்தை தரிசனம் செய்தவாறு அமைதியாக அமர்ந்திருந்தார். வாழும் தெய்வம் பாபா என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டதாகவே தோன்றியது. அவர் விழிகள் பக்திப் பரவசத்தால் பளபளத்தன. தம்மை முதல் முறையாக தரிசிக்க வந்திருக்கும்பண்டிட்டை, சிறிதுநேரம் பிரியமாகப்பார்த்துக் கொண்டிருந்தார் பாபா. அவரின்மனத்திற்குள் ஊடுருவி அவரைப் பார்ப்பது போல் இருந்தது பாபாவின் தீட்சண்யமான பார்வை.
பிறகு பண்டிட்டிடம், தாதாபட் கேல்கர் வீடு எங்கிருக்கிறது என்று விசாரித்து, நான் அனுப்பியதாக அவனைச் சென்று பார்த்துவா! நீ போகும்போதுசந்தனம் உள்ளிட்ட பூஜைப் பொருட்களோடு அவன் என் தரிசனத்திற்காகப் புறப்பட்டுக் கொண்டிருப்பான். நீ அவனோடு மசூதிக்குத்திரும்பி வா! என்று கூறி அனுப்பி வைத்தார்.பாபாவின் வார்த்தைகளை வேதவாக்காகக் கொண்ட பண்டிட், மசூதியை விட்டு எழுந்துசென்று, தாதாபட் கேல்கர் வீட்டை விசாரித்து,அங்குபோய் நின்றார். பாபா தம்மை அவரிடம் அனுப்பியதாகத் தெரிவித்தார். அவரை அன்போடு வரவேற்ற கேல்கர்,பூஜைக்கான ஊதுபத்தி, கற்பூரம், சந்தனம், மலர்கள், நிவேதனப் பொருட்களான திராட்சை, கல்கண்டு போன்றவற்றை எடுத்துக் கொண்டு பண்டிட்டையும் அழைத்துக் கொண்டு பாபாவின் மசூதிக்கு வந்து சேர்ந்தார். பூஜைப் பொருட்களை பாபாவின் எதிரில் வைத்துவிட்டு கேல்கர் அமர்ந்தபோது, பண்டிட்டும் அருகே அமர்ந்தார்.பாபாவையே மெய்மறந்து பார்த்துக் கொண்டிருந்த பண்டிட், உணர்ச்சி வசப்பட்டவராய் திடீரென்று எழுந்தார். பூஜைப் பொருட்களில்இருந்த சந்தனத்தை எடுத்துத் தண்ணீர் விட்டு நன்கு குழைத்தார்.
அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார்என பக்தர்கள் வியப்போடு பார்த்துக்கொண்டிருந்தார்கள். பண்டிட், பாபா அருகே சென்று குழைத்த சந்தனத்தை முப்பட்டைத் திருநீறுபோல் பாபாவின் நெற்றியில் இட்டுவிட்டார். அவர் இந்த உலகையே மறந்துஇயங்குவதாய்த் தோன்றியது. பாபா ஏதொன்றும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தார்.பக்தர்களுக்கு வியப்பு. முக்கியமாக,மகல்சாபதிக்குப் பெரும் வியப்பு. கழுத்தில்மட்டுமே சந்தனம் பூச அனுமதித்து வந்த பாபா,எப்படி இன்று நெற்றியில் பூச அனுமதி தந்தார்?இரவு நெடுநேரம் வரை அந்தக் கேள்விக்கு பதில் கிட்டாமலே இருந்தது. பண்டிட் விடைபெற்றுச்சென்றுவிட்டார். பாபா, அந்த முப்பட்டைச் சந்தனம் துலங்கும் நெற்றியுடன் சிரித்தவாறே வீற்றிருந்தார்.கேல்கர் வியப்போடு, பாபாவிடம் பலரும்கேட்க விரும்பிய அந்தக் கேள்வியை நேரடியாகக் கேட்டே விட்டார்: பாபா! நீங்கள் உங்கள் நெற்றியில் சந்தனம்பூச அனுமதித்ததில்லையே? இன்று மட்டும் பண்டிட்டுக்கு அந்த அனுமதியை எப்படி அளித்தீர்கள்? அனைவரும் பாபாவின்பதிலுக்காக ஆவலாய்க் காத்துக்கொண்டிருந்தார்கள்.நகைத்தவாறே பாபா பதில் சொல்லத்தொடங்கினார். பாபாவின் பதிலைக் கேட்டகேல்கர் உள்ளிட்ட அத்தனை அன்பர்களும்வியப்பின் உச்சிக்கே சென்றார்கள்.அவ்வளவு அற்புதமான பதில் அது. அப்படியொரு பதிலை பாபா சொல்வார் என யாருமே எதிர்பார்க்கவில்லை..