பதிவு செய்த நாள்
04
ஏப்
2014
11:04
மதுரை: மதுரை நேதாஜி ரோடு தண்டாயுதபாணி கோயில் பங்குனி உத்திரப் பெருவிழா ஏப்.,8 முதல் 14 வரை நடக்கிறது. நிர்வாக அதிகாரி மாலதி கூறியதாவது: ஏப்., 8ல் காலை 5 மணிக்கு ஸ்கந்த ஹோமம், ருத்ர ஜெபம், மகா அபிஷேகம், தங்க கவச சாத்துப்படி, மாலை 4 மணிக்கு பூக்கூடாரம், சந்தனக்காப்பு அலங்காரத்துடன் தொடங்குகிறது. மாலை 6 மணிக்கு, 216 திருவிளக்கு பூஜை நடக்கிறது. ஏப்.,13 பங்குனி உத்திரத்தன்று, பால்குடம் மற்றும் பூப்பல்லக்கு நடக்கிறது. தன்முறையாக இந்தாண்டு பால்குடம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 6 மணிக்கு வைகையில் இருந்து 100 பேர் பால்குடங்களுடன் புறப்பட்டு, ஊர்வலம் வருகின்றனர். பின், சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்படும். இரவு 7 மணிக்கு மின்அலங்காரம், செண்டை மேளம், சிறப்பு நாதஸ்வரம், வாணவேடிக்கை மற்றும் இம்மையில் நன்மை தருவார் கோயில் திருப்புகழ் சபை குழுவினரின் திருப்புகழ், தேவாரம் பாராயணங்களுடன் சுவாமி மாசிவீதிகளில் வலம் வருவார். ஏற்பாடுகளை தக்கார் கருணாநிதி செய்து வருகிறார், என்றார்.