செஞ்சி: சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் தேர் செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. செஞ்சி அருகே உள்ள சிங்கவரம் மலை மீது பழமையான ரங்கநாதர் குடைவரை கோவில் உள்ளது. இங்கிருந்த தேர் பழமையின் காரணமாக உடைந்ததால் பல ஆண்டுகளாக கோவிலில் பிரம்மோற்சவம் தடைபட்டிருந்தது. சில ஆண்டுகளாக தற்காலிக தேர் அமைத்து பிரம்மோற்சவம் நடத்தி வந்தனர். இதையடுத்து பக்தர்களின் கோரிக்கையை ஏற்று இந்து சமய அறநிலையத்துறை மூலம் 30 லட்சம் ரூபாய் மதிப்பில் தேர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. 41 அடி உயரத்தில் அமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை திருச்சி பெல் நிறுவனத்திடம் இருந்து வாங்கி உள்ளனர். பண்ருட்டி திருவதிகை புருஷோத்தம ஆச்சாரி தலைமையிலான மர சிற்ப கலைஞர்கள் ஓராண்டாக தேர் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதல் இரண்டு நிலைகள் முடிவடைந்துள்ளன. மூன்றாம் நிலை கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. சில மாதங்களில் தேர் வெள்ளோட்டம் நடைபெறும் வாய்ப்புள்ளது.