பதிவு செய்த நாள்
07
ஏப்
2014
12:04
சேலம்: சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் வசந்த நவராத்திரி விழாவை முன்னிட்டு, நாளை ராமநவமி உற்சவம் கொண்டாடப்படுகிறது. சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் கடந்த, 31ம் தேதி வசந்த நவராத்திரி விழா தொடங்கியது. தினமும் மாலை, 6.30 மணிக்கு சொர்ணாம்பிகை அம்மனுக்கு, பத்து அர்ச்சகர்கள், தொடர் குங்கும லட்சார்ச்சனை நடத்தி வருகின்றனர். மேலும், 16 வகையான உபச்சாரங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. பூஜை முடிவில், அன்னதானம் வழங்கப்படுகிறது. தினமும் கலை நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நவராத்திரி லட்சார்ச்சனை விழாவை தொடர்ந்து, நாளை (8ம் தேதி) ஸ்ரீராமநவமி கொண்டாடப்படுகிறது. அன்று காலை, 8 மணிக்கு, 108 மூலிகைகளால் லலிதா சகஸ்ரநாம ஹோமம் நடக்கிறது. வரும், 9ம் தேதி விழா நிறைவு பெறுகிறது. விழாவில், லட்சார்ச்சனை செய்யப்பட்ட மகிமை வாய்ந்த குங்குமம் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது. நிறைவு நாளன்று சுகவனேஸ்வரர், மகாநந்தீசுவரர், அதிகார நந்தீசுவரர், நிருத கணபதி, தட்சிணாமூர்த்தி, வலம்புரி கணபதி, ஐயப்பன், கங்காள மூர்த்தி, சரஸ்வதி, கஜலட்சுமி, ஆஞ்சநேயர், சூரியன், பைரவர் ஆகிய சன்னதிகளுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்படுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் கட்டளைதாரர் ராதாகிருஷ்ணன் செய்து வருகிறார்.