மலர் என்றாலே அது தாமரை தான் என இலக்கியத்தில் குறிப்பிடுவர். அந்த அளவுக்கு சிறப்பிடம் பெற்றது தாமரை. இதில் செந்தாமரை, வெண்தாமரை என இருவகை உண்டு. லட்சுமி, சிவன், சூரியன், அம்பிகைக்கு செந்தாமரையும், சரஸ்வதி, சந்திரனுக்கு வெள்ளைத் தாமரையும் ஏற்றது.
செல்வத்தை வழங்கும் திருமகளின் இருப்பிடம் செந்தாமரை. தாமரைக்கும் லட்சுமிக்கும் இருக்கும் தொடர்பை குறிக்கும் சொற்கள் பல உள்ளன. பத்மா என்றால் தாமரை என்பது பொருள். தாமரை முகம் கொண்டவள் என்பதால் பத்மமுகி. தாமரையில் வீற்றிருப்பதால் பத்மமாலாதராம். தாமரை மலரைக் கையில் தாங்கி நிற்பதால் பத்மஹஸ்தாம். திருமகளின் மேனியில் தாமரையின் நறுமணம் எழுவதால் பத்மகந்தி. பத்மநாபனான விஷ்ணுவின் மனைவியானதால் பத்மநாபப்ரியா. கண்கள் தாமரை போல அழகு மிக்கதால் பத்மநளாயதாட்சி. தாமரையில் வாழ்வதால் பத்மாலயம். தாமரையில் பிறந்ததால் பத்மேமாத்பவம் எனக்குறிபிடுவர்.