பாற்கடலில் கடைந்த அமிர்தத்தை எடுத்த பராசர முனிவர் அதனை லிங்கமாக பிடித்து கங்கை, காவிரி முதலிய புனித நதிகளை லிங்கத்தில் ஆவாஹனம் செய்து வழிபட்டார். அவருக்கு சிவன் காட்சி கொடுத்தருளினார். பராசரர் பிடித்து வழிபட்ட லிங்கம் ஈரோடு அருகிலுள்ள பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் உள்ளது. வெள்ளை நிறத்தில் இருக்கும் இந்த லிங்கத்தின் பாணம் மட்டும் தனியே எடுத்து செல்லும்படியாக தனித்து இருக்கிறது. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் இங்குள்ள தீர்த்ததில் நீராடி, அமிர்த லிங்கத்தை கையில் எடுத்துக்கொண்டு சன்னதியை சுற்றி வந்து வழிபடுகின்றனர். காவிரி, பவானி, அமிர்தநதி ஆகிய மூன்று நதிகள் சங்கமிக்கும் இடத்தின் (கூடுதுறை) கரையில் இந்த தலம் அமைந்துள்ளது. இதில் அமிர்தநதி பூமிக்கடியில் சங்கமிப்பதாக ஐதீகம்.