பதிவு செய்த நாள்
26
ஏப்
2014
10:04
ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் உள்ள நடராஜர் சிலைக்கான அடையாளங்களும், ஸ்ரீபுரந்தான் கோவிலில் திருடப்பட்ட நடராஜர் சிலையும், முற்றிலும் ஒரே மாதிரி இருப்பதை, தொல்லியல் ஆய்வாளர் நாகசாமி உறுதி செய்துள்ளார். இந்த திடீர் திருப்பத்தால், ஆஸ்திரேலியாவில் உள்ள சிலை, தமிழகத்துக்கு விரைவில் கொண்டு வரப்படலாம் என, தெரிகிறது.
எத்தனை சிலைகள்?: அரியலூர் - தா.பழூர் சாலையில் உள்ளது, ஸ்ரீபுரந்தான் கிராமம். இந்த கிராமத்தில், இரண்டு சிவன் கோவில்களும், இரண்டு பெருமாள் கோவில்களும் உள்ளன. அவற்றில், பிரகதீஸ்வரர் கோவில், கி.பி., ௯ம் நூற்றாண்டில், மூன்றாம் குலோத்துங்கன் காலத்தில் கட்டப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், இந்த கோவிலில் இருந்த, 5 அடி உயரமுள்ள நடராஜர் சிலை, 4 அடி உயரமுள்ள சிவகாமி அம்மன் சிலை, நர்த்தன விநாயகர், சந்திரசேகரர், சந்திரசேகர அம்மன், மாணிக்கவாசகர், சம்பந்தர் ஆகிய உற்சவ விக்கிரகங்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இவற்றின் மதிப்பு, பலகோடி ரூபாய். சிலை கடத்தல் மன்னன், சுபாஷ் கபூர் தலைமையிலான, சர்வதேச அளவிலான சிலை கடத்தல் கும்பல், இதில் ஈடுபட்டிருப்பது, தெரிந்தது. தற்போது, அந்த கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த கோவிலில் திருடப்பட்ட, நடராஜர் சிலை தற்போது ஆஸ்திரேலியாவின் கேன்பெர்ரா நகரில் உள்ள தேசிய கலைக்கூடத்தில் உள்ளது. அதை தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சியில், பொருளாதார குற்றப்பிரிவின் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், ஈடுபட்டுள்ளார்.
யுனெஸ்கோ உடன்பாட்டின்படி, ஒரு நாட்டில் இருந்து சட்டவிரோதமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி செய்யப்படும் கலைப்பொருட்களை அந்த நாட்டிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்பதால், அந்த சிலையை, தமிழகத்திற்கு கொண்டு வரும் முயற்சி, நடந்து வருகிறது. இந்த நிலையில், ஆஸ்திரேலிய தேசிய கலைக்கூடத்தில் இருக்கும் நடராஜர் சிலையின் புகைப்படத்தையும், ஸ்ரீபுரந்தான் கோவிலில், பல்வேறு காலகட்டங்களில் எடுக்கப்பட்ட நடராஜர் சிலையின் புகைப்படங்களையும், போலீசார், முதுபெரும் தொல்லியல் துறை ஆய்வாளர் இரா. நாகசாமியிடம் காட்டினர். இரண்டு படங்களையும் ஒப்பிட்ட நாகசாமி, அனைத்து அடையாளங்களும், முற்றிலும் ஒத்துப் போகவதாக தெரிவித்துள்ளார்.
ஒற்றுமை என்ன?: இதுகுறித்து, நாகசாமி கூறியதாவது: இரண்டு சிலைகளிலும், நெருப்பை தாங்கும் இடக்கரம், மார்பு சங்கிலி, கழுத்து சங்கிலியில் உள்ள புலிப்பல், சிறு நாகங்களுடன் கூடிய கங்கை நதி, இடதுகரத்தில் உள்ள கங்கணம் போன்றவை ஒத்துள்ளன. தலையிலுள்ள, எட்டு நாரை இறகுகளும் சரியாக உள்ளன. திருவாசியின் அடிப்பகுதியில், வலப்புறத்தில் உள்ள மகரம், நெருப்புச் சுடரின் மிக அருகிலும், இடதுபுறத்தில் உள்ள மகரம், நெருப்புச் சுடரை விட்டு விலகியும் உள்ளதும், இரண்டு சிலைகளும் ஒன்று தான் என்பதை உறுதிப்படுத்துகின்றன. இவ்வாறு, நாகசாமி தெரிவித்துள்ளார். இதையடுத்து, ஸ்ரீபுரந்தான் நடராஜர் சிலை, விரைவில் தமிழகம் கொண்டு வரப்படலாம் என, தெரிகிறது. - நமது நிருபர் -