பதிவு செய்த நாள்
03
மே
2011
05:05
மனிதப் பிறப்பில் எட்டாவது மாதம் ஒரு திருப்புமுனை. தாயின் கருப்பையில் இருக்கும் குழந்தை அப்போதுதான் முழு வளர்சியைப் பெறுகிறதாம். கருப்பையில் இடம்போதாமல் நெருக்கத்தில் சிக்கி, இருக்கும் இடத்துக்கு ஏற்ப தன்னுடைய கை-கால்களை மடக்கிக்கொண்டு, உடல் உறுப்புகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முதல் அறிவை அப்போதுதான் அந்தக் குழந்தை பெறுகிறது. முற்பிறவியில் செய்த தீவினையால்தானே, ஒரு தாயின் கருப்பைக்கு வந்தோம். இந்தப் பிறவியில் தவறு ஏதும் செய்யக் கூடாது எனும் சிந்தனை ஞானம் ஏற்பவதும் 8-வது மாதத்தில்தான் என்கிறது கீதை. ஆனால் பிறந்ததும் அந்த ஞானத்தை மனிதன் மறந்து போகிறான். மீண்டும் அந்த ஞானம் அவனுக்கு 80 வயதில் நிச்சயம் தோன்றுமாம். இதனாலேயே 8 எனும் எண்ணை ஞான எண்ணாகக் கூறுவார்கள். மாணிக்கவாசகர் அருளிய திருவாசகமும், எட்டு திங்களில் கட்டமும் பிழைத்தும்... என்று கருப்பையில் உள்ள 8 மாத சிசுவின் வடிவை, மிக அற்புதமாக விவரிக்கிறது. அதுசரி.. மாணிக்கவாசகர் சொல்லச் சொல்ல, அந்த நடராஜ பெருமானே தன் கைப்பட எழுதிய பெருமை மிக்க நூலான திருவாசகம், பன்னிரு திருமுறைகளில் எந்தத் திருமுறையில் வைக்கப்பட்டுள்ளது தெரியுமா? 8 - வது திருமுறையாகத்தான் !
அஷ்ட கணபதிகள்: முழுமுதற் கடவுளாம் கணபதியை அஷ்டகணபதிகளாகவும் கொண்டாடுவர். ஆதி கணபதி, மகாகணபதி, நடன கணபதி, சக்தி கணபதி, வாலை கணபதி, உச்சிஷ்ட கணபதி, உக்ர கணபதி, மூல கணபதி ஆகிய அஷ்ட பிள்ளையார்களை வழிபட வினைகள் யாவும் நீங்கும் !
அஷ்ட புஷ்பங்கள்: புன்னை, செண்பகம், பாதிரி, வெள்ளெருக்கு, நந்தியாவர்தம், அரளி, நீலோத்பலம், தாமரை ஆகிய மலர்களை தெய்வ பூஜைக்கு சிறந்த அஷ்ட புஷ்பங்களாகப் போற்றுகின்றன ஞானநூல்கள் !
திசை யானைகள் எட்டு: ஐராவதம், புண்டரீகம், வாமனம், குமுதம், அஞ்சனம், புட்பதந்தம், சார்வபௌமம், சுப்பிரதீகம் ஆகியவையே திசை யானைகள் 8 எனப் போற்றுகின்றன புராணங்கள் !
அஷ்ட ஐஸ்வரியங்கள்: தனம், தானியம், நிதி, பசு, புத்திரர், வாகனம், சத்தம், தைரியம் ஆகியன அஷ்ட ஐஸ்வரியங்களாகும். இறைசிந்தையும், அறவாழ்வும் இந்தச் செல்வங்களைப் பெற்றுத் தரும்.
அருள் தரும் அஷ்ட பிரபந்தங்கள்: மாலவனின் பெருமைகளை விவரிக்கும் நூல்களில் எட்டு குறிப்பிடத்தக்கவை. அவை: திருவரங்கக் கலம்பகம். திருவரங்கத்துமாலை. திருவாங்கத்து அந்தாதி, ஸ்ரீரங்கநாயகர்ஊசல், திருவேங்கடமாலை, திருவேங்கடத்து அந்தாதி, அழகர் அந்தாதி, நூற்றெட்டுத் திருப்பதி அந்தாதி !
அஷ்ட பந்தனம்: சுக்கான்கல், கொம்பரக்கு, சாதிலிங்கம், செம்பஞ்சு, தேன் மெழுகு, எருமை வெண்ணெய், குங்கிலியம், நற்காவி.... ஆகிய எட்டு பொருட்களுமே, ஆலயங்களில் விக்கிரக பிரதிஷ்டையில் பயன்படும் அஷ்ட பந்தனமாகும்.
அட்டமா ஸித்திகள்: தவமுனிகள் செய்யும் யோக முறையால் எட்டுவிதமான ஸித்திகளை அடையலாம். அற்புதமான அந்த ஸித்திகள்: அணிமா, மகிமா, கரிமா, லகிமா, பிராத்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் !
அஷ்ட வசுக்கள்: அனலன், அணிலன், ஆபத்சைவன், சோமன், தரன், துருவன், பிரத்தியூஷன், பிரபாசன் ஆகியோரே அஷ்ட வசுக்கள் ! இவர்களில் பிரபாசன் என்பவனே, வசிஷ்ட முனிவரின் சாபத்தால் பூமியில் பிறந்து, பீஷ்மராகத் திகழ்ந்தான் !
அஷ்ட வித்யேச்வரர்: அநந்தர், சூக்ஷ்மர், சிவோத்தமர், ஏகநேத்ரர், ஏகருத்ரர், திரிமூர்த்தி, ஸ்ரீகண்டர், சிகண்டி ஆகியோரை அஷ்ட வித்யேச்வரர் எனப் போற்றுவர். இவர்கள் மாயைக்கு மேல் சுத்த வித்யைக்குக் கீழிருக்கும் புவனவாசிகள் என்கின்றன ஞானநூல்கள்.
எட்டெட்டந்தாதி: காஞ்சி ஸ்ரீகாமாட்சி அம்மனின் மீதான ஒரு பாடல் இது. எட்டெட்டு பாடலாக 64 செய்யுள்கள் அடங்கிய அந்தாதியாக திகழ்கிறது என்பார்கள். ஆனாலும், விநாயகர் வழிபாடாக முதலில் ஒரு பாடலும், செய்யுள் பலனாக கடைசியில் ஒரு பாடலும் அதிகம் உண்டு.