பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
10:04
கூடலூர் : மங்கலதேவி கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி விழா, மே 14 ல் கொண்டாடப்பட உள்ளது. அன்று, காலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்களை அனுமதிப்பது, என தேக்கடியில், நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழக-கேரள எல்லையில், மங்கலதேவி கண்ணகி கோயில் உள்ளது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று, இரு மாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர். இந்த ஆண்டு,மே 14ல், கண்ணகி கோயிலில் விழா கொண்டாடப்படுகிறது. இதற்கான ஆலோசனைக் கூட்டம், நேற்று தேக்கடி ராஜிவ் காந்தி அறிவியல் மையத்தில், தேனி கலெக்டர் பழனிசாமி, இடுக்கி கலெக்டர் அஜித் பாட்டீல் ஆகியோர் தலைமையில், நடந்தது. இக்கூட்டத்தில், தமிழக அரசு சார்பில் எஸ்.பி.,மகேஷ், மேகமலை வன உயிரின காப்பாளர் சொர்ணப்பன், மங்கலதேவி கண்ணகி அறக்கட்டளை தலைவர் தமிழாதன், உள்ளிட்டோரும், கேரள அரசு சார்பில், எஸ்.பி.,அலெக்ஸ் வர்கீஸ், தேக்கடி வனத்துறை இணை இயக்குனர் சஞ்சயன்குமார் உட்பட அனைத்து துறை அதிகாரிகள், பக்தர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், பிளாஸ்டிக் தடை செய்யப்பட்டுள்ளது. 14 இடங்களில், குடிநீர் வசதி. இரு மாநில பக்தர்கள் சார்பில், ஆறு பொங்கல் வைக்க ஏற்பாடு. அதிகாலை 5 மணி முதல் மாலை 5.30 மணி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அனுமதி பெற்ற ஜீப்புகள் மட்டுமே கோயிலுக்கு செல்ல முடியும். தமிழகத்தில் இருந்து தமிழக வனப்பகுதியான பளியன்குடி பாதை சீரமைத்து, பக்தர்கள் நடந்து செல்ல அனுமதிக்கப்படும். குமுளியில் இருந்து கோயிலுக்கு செல்லும் ஜீப் பாதை சீரமைக்கப்படும் உள்ளிட்ட முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.