பதிவு செய்த நாள்
29
ஏப்
2014
12:04
காஞ்சிபுரம் : மழை வேண்டி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கோவில்களில், வருண சூக்த வேத மந்திர பாராயணங்கள் மற்றும் வருண ஜபம் நடைபெற்றது. தமிழகத்தில், இந்து அறநிலையத் துறையின் கீழ் உள்ள முக்கிய கோவில்களில், வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடத்த வேண்டும் என, இந்து அறநிலையத் துறை ஆணையர் உத்தரவிட்டார். வருண ஜபம் இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள சிவன், பெருமாள் மற்றும் பிற அம்மன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் நேற்று அதிகாலை 6:00 மணிக்கு யாகம் துவங்கியது. சிவன் கோவில்களில், சிவபெருமானுக்கு சீதன கும்பம், தாராபாத்திர நீர் விழச்செய்தல், ருத்ராபிஷேகம், திரு ஞானசம்பந்தர் இயற்றிய, 12ம் திருமுறை மேகராக குறிச்சி, பண் என்ற தேவாரம் மற்றும் சுந்தரமூர்த்தி நாயனாரின் ஏழாம் திருமுறை ஆகியவை ஓதுதல் ஆகியவை நடைபெற்றன. பெருமாள் கோவில்களில், சிறப்பு திருமஞ்சனமும், அம்மன் கோவில்களில் சிறப்பு அபிஷேங்களும் செய்யப்பட்டன. யாகத்தின் முதல் நாளான நேற்று ஏகாம்பரநாதர், வரதராஜ பெருமாள் ஆகிய கோவில்களில், வருணசூக்தவேத பாராயணம் மற்றும் காயத்ரி மந்திர பாராயணம் நடந்தன. இதேபோல், திருப்போரூர் சரவண பொய்கையில் நேற்று காலை 5.55 மணிக்கு துவங்கி 7:00 மணி வரை சிவாச்சாரியர்கள் வருண ஜபம் செய்தனர். முன்னதாக கலச பூஜை செய்து, கணபதியை வழிபட்டனர். திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வருண பகவானுக்கு, சிறப்பு யாகம், நேற்று நடத்தப்பட்டது.சிறப்பு யாகம் திருத்தணி முருகன் மலைக்கோவில் வளாகத்தில் உள்ள காவடி மண்டபத்தில், நேற்று அதிகாலை, 5:55 மணிக்கு மழை வேண்டி, வருண பகவானுக்கு சிறப்பு யாகம் துவங்கியது. காலை, 9:00 மணி வரை யாகம் நடத்தப்பட்டது. இதில், கோவில் தக்கார் ஜெய்சங்கர், இணை ஆணையர் புகழேந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அதே போல், திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவிலும், நேற்று காலை, வருண பகவானுக்கு சிறப்பு யாகம் நடந்தது.