திருநெல்வேலி: நாங்குநேரி வானுமாமலை மடத்தின் ராமானுஜ ஜீயர் கவலைக்கிடமாக உள்ளார். புதிய ஜீயரை நியமிக்கும் ஏற்பாடுகள் நடக்கின்றன. நெல்லையில் இருந்து நாகர்கோவில் செல்லும் சாலையில், நாங்குநேரியில் தோத்தாத்ரிநாதர் ஆலயம் உள்ளது. இந்த வைணவ தலத்தில்தான் வானுமாமலை ஜீயர் மடம் செயல்படுகிறது. இது, 600 ஆண்டுகள் பழமையானது. இதன் 30வது ஜீயராக ஸ்ரீகலியன் ராமானுஜ ஜீயர், 84, பொறுப்பு வகித்தார். கல்லீரல் பாதிப்பால், நெல்லை தனியார் மருத்துவமனையில், சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் இரவில், உடல் நிலை கவலைக்கிடமானது. ஜீயர் முக்தி அடையும் முன்பாக, மடத்தை நிர்வகிப்பதற்காக புதிய ஜீயர் தேர்ந்தெடுக்கப்படுவார். ஆனால், புதிய ஜீயர் தேர்ந்தெடுக்கப்படவில்லை. புதிய ஜீயரை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் மடத்தில் நேற்று நடந்ததாக தெரிகிறது. இதுகுறித்து முறையான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. ராமானுஜ ஜீயர் குணமடைந்து மீண்டும் மடத்தின் பொறுப்புகளை கவனிப்பார் அல்லது புதிய ஜீயர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.