பதிவு செய்த நாள்
30
ஏப்
2014
12:04
ப.வேலூர்: புது மாரியம்மன் கோவிலில் நடந்த குண்டம் விழாவில், ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். ப.வேலூர் பேட்டை புதுமாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் குண்டம் இறங்கும் விழா கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு விழா, கடந்த, 22ம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து சிறப்பு அபிஷேகம், ஆராதனை, திருவீதி உலா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று முன்தினம் மாலை, 6 மணிக்கு வடிசோறு வைத்து அம்மனுக்கு படையலிடப்பட்டது. நேற்று மாலை, 4 மணிக்கு குண்டம் இறங்கும் விழா நடந்தது. சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள், காவிரி ஆற்றுக்குச் சென்று புனித நீராடி ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து, கோவில் முன் அமைக்கப்பட்டிருந்த குண்டத்தில் இறங்கி அம்மனுக்கு நேர்த்திக்கடனை செலுத்தினர். இன்று, (ஏப்., 30) காலை, 9 மணிக்கு அலகு குத்தியும், அக்னி சட்டி எடுத்தும் பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர். இரவு, 7 மணிக்கு பொங்கல், மாவிளக்கு பூஜை நடக்கிறது. நாளை (மே, 1) காலை கம்பம் பிடிங்கி காவிரி ஆற்றில் விடப்படுகிறது. மே, 2ம் தேதி மாலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.