பதிவு செய்த நாள்
02
மே
2014
10:05
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் மே 10ல் நடக்கிறது. இக்கோயில் திருவிழாக்களில், சித்திரைத் திருவிழா முக்கியத்துவம் வாய்ந்தது. நேற்று சுவாமி சன்னதி தங்க கொடி மரத்தில் காலை 10.39 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளினர். பின், கோயில் குலாலர் மண்டபத்திற்கு சென்றனர். தக்கார் கருமுத்து கண்ணன், கோயில் நிர்வாக அதிகாரி ஜெயராமன் உட்பட பலர் பங்கேற்றனர். இரவு, மாசிவீதிகளில் அம்மன் சிம்மவாகனத்திலும், சுவாமி கற்பகவிருட்சம் வாகனத்திலும் உலா வந்தனர். திருவிழா நடக்கும் நாட்களில் அம்மனும், சுவாமியும் தினமும் காலை, இரவு பல்வேறு வாகனங்களில் உலா வருகின்றனர். முக்கிய நிகழ்ச்சியாக மே 8ம் தேதி அம்மனுக்கு பட்டாபிஷேகம் செய்து, ரத்தின செங்கோல் வழங்கும் நிகழ்ச்சி நடக்கிறது. மே 9ல் திக்குவிஜயமும், மே 10ல் காலை 10.30 மணி முதல் 10.54க்குள் திருக்கல்யாணமும், மே 11ல் தேரோட்டமும் நடக்கிறது.
மே14ல் ஆற்றில் இறங்குதல்: மே 12ல் மாலை 6 மணிக்குள் தங்கப்பல்லக்கில் கள்ளழகர் மதுரைக்கு எழுந்தருளுகிறார். மே 13ல் காலை 7 மணிக்கு மூன்று மாவடியில் எதிர்சேவை நடக்கிறது. மே 14ல் காலை 6 முதல் காலை 6.30 மணிக்குள் வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்குகிறார். மே 15ல் தேனூர் மண்டபத்தில் காலை 11 மணிக்கு மண்டூக முனிவருக்கு சாப விமோசன நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு ராமராயர் மண்டபத்தில் தசாவதார நிகழ்ச்சியும் நடக்கிறது. மே 16 இரவு 2.30 மணிக்கு கருப்பண சுவாமி கோயிலில் இருந்து அழகர்கோவிலுக்கு பூப்பல்லக்கில் சுவாமி புறப்படுகிறார்.