பதிவு செய்த நாள்
02
மே
2014
10:05
அட்சயதிரிதியை அன்று என்ன செய்ய வேண்டும்: இந்நாளில் வாங்கப்படும் எந்தப் பொருளும் இல்லத்தில் குறைவின்றி நிறைந்திருக்கும் என்பது நம்பிக்கை. எனவேதான் இந்நாளில் தங்கம் வாங்க விரும்புகின்றனர். ஆனால் இவ்வளவு விலை உயர்ந்த பொருளை அனைவராலும் வாங்க இயலாது. அதற்காக மனம் தளர வேண்டாம். நமக்கு மிகவும் உபயோகமான பொருட்களை வாங்கிப் பயனடையலாமே. அன்று உப்பு, அரிசி மற்றும் தேவையான ஓரிரு ஆடைகள், ஏதாவது ஒரு சிறு பாத்திரம் என வாங்கலாம். எப்படியும் நாம் மாதாமாதம் மளிகைப் பொருட்கள் வாங்கி ஆக வேண்டும். அதனை இம்மாதத்தில் மட்டும் இந்த அட்சயதிரிதியை நாளில் வாங்கி வளம் பெறலாமே. வட இந்தியாவில் இந்நாளை அகஜித் என்பர். ஸ்ரீமகாலட்சுமி விஷ்ணுவின் மார்பில் இந்நாளில்தான் இடம் பெற்றாள்; நிரந்தரமாகத் தங்கினாள். அஷ்ட லட்சுமிகளில் ஐஸ்வரிய லட்சுமியும், தான்ய லட்சுமியும் தோன்றிய நாளும் இதுதான். ஸ்ரீலட்சுமியானவள் வைகுண்டத்தில் மகாலட்சுமியாகவும், பாற்கடலில் ஸ்ரீலட்சுமியாகவும், இந்திரனிடம் சுவர்க்க லட்சுமியாகவும், அரசர்களிடம் ராஜ லட்சுமியாகவும், வீரர்களிடம் தைரிய லட்சுமியாகவும், குடும்பத்தில் கிரக லட்சுமியாகவும், பசுக்களில் கோமாதாவாகவும், யாகங்களில் தட்சிணையாகவும், தாமரையில் கமலையாகவும், அவிர்பாகம் அளிக்கும்போது ஸ்வாகா தேவியாகவும் விளங்குகிறாள். இப்படி சகல யோகங்களுக்கும் ஆதாரமாக விளங்குபவள் லட்சுமிதான். எனவே, அட்சய திரிதியை அன்று ஸ்ரீமன் நாராயணனின் இணைபிரியாத தேவி ஸ்ரீலட்சுமியைப் பூஜிக்க வேண்டும். நம் இல்லத்தில் சாஸ்திரப்படி பூஜை செய்பவர்களுக்கு திருவருளும் லட்சுமி கடாட்சமும் கிட்டும். அன்று செய்யும் தான-தர்மத்தால் மரண பயம் நீங்கி உடல் நலம் உண்டாகும். அன்னதானத்தால் விபத்து விலகும். ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவினால் நம் குடும்ப குழந்தைகளின் கல்வி மேம்படும். தானதர்மங்கள் செய்தால் எம வேதனை கிடையாது. நலிந்தவர்களுக்கு உதவி செய்தால் மறுபிறவியில் ராஜயோக வாழ்க்கை அமையும். ஆடைகள் தானம் செய்தால் நோய்கள் நீங்கும்; பழங்கள் தானம் செய்தால் உயர் பதவிகள் கிடைக்கும். மோர், பானகம் அளித்தால் கல்வி நன்கு வளரும்; தானியங்கள் தானம் கொடுத்தால் அகால மரணம் ஏற்படாது. தயிர் சாதம் தானம் அளித்தால் பாவ விமோசனம் ஏற்படும். முன்னோருக்கு தர்ப்பணம் செய்தால் வறுமை நீங்கும். அட்சய திருதியை அன்று ஆலிலையில் மிருத்யுஞ்ஜய மந்திரத்தை ஜபித்து, அதை நோயாளிகளின் தலையணையின் அடியில் வைத்தால் நோய் விரைவில் குணமாகும் என்பது நம்பிக்கை.
அட்சய திருதியும் அதன் வழிபாட்டு அமைப்பும்: அட்சய திருதியை நாளில், பூஜையறையில் குலதெய்வ - இஷ்ட தெய்வங்களை வணங்கி வழிபடும் போது, பூஜையில் தொழில் ஆவணங்கள், பணம் இவற்றையெல்லாம் வைத்து அவர்களுக்குரிய மந்திரங்களையும் உச்சரித்து, வலம்புரிச் சங்கில் தீர்த்தம், பால் போன்றவை வைத்து சாமிக்கு நிவேதனம் செய்ய வேண்டும். மேலும் இத்துடன் அருகம்புல், வில்வம், துளசி, மரிக்கொழுந்து, மல்லிகை, செந்தாமரை மலர்களாலும் வீட்டிலும் வியாபார ஸ்தலங்களிலும் வழிபட்டால், தொழில் முன்னேற்றமும் குடும்ப விருத்தியும் ஏற்படும்.
அட்சய திரிதியை நன்னாளான இன்று லட்சுமியை வழிபடும் விதத்தில் இந்த ஸ்தோத்திரம் இடம்பெற்றுள்ளது.
* மகாலட்சுமி தாயே! திருமாலின் மார்பில் உறைபவளே! மூவுலகையும் காத்து அருள்பவளே! ஸ்ரீ பீடத்தில் வீற்றிருப்பவளே! செந்தாமரை மலரில் உறைந்திருப்பவளே! மதுர வல்லித் தாயே! உன்னைப் போற்றுகிறோம்.
* பிருகு முனிவரின் மகளாக அவதரித்த பார்கவியே! குலமாதர் போற்றும் குலக்கொடியே! ஸ்ரீதரனின் துணைவியே! நல்லோரைக் கரை சேர்க்கும் நாயகியே! குபேரனுக்கு வாழ்வு அளிப்பவளே! உன் பாதமலரைச் சரணடைகிறோம்.
* அமுதம் நிறைந்த பொற்கலசம் தாங்கி நிற்பவளே! அருள் நெஞ்சினர் உள்ளத்தில் வாழ்பவளே! அலங்கார ரூபிணியே! உன் கடைக்கண் பார்வையால் எங்கள் இல்லம் செழித்திருக்கட்டும். எங்களுக்கு ராஜயோக வாழ்வைத் தந்தருள்வாயாக.
* பூங்கொடியாகத் திகழ்பவளே! அலமேலு மங்கை தாயே! மூவரும் தேவரும் போற்றும் முதல்வியே! ஜகன்மாதாவே! பாற்கடலில் அவதரித்தவளே! அலைமகளே! அஷ்ட ஐஸ்வர்யங்களையும் வாரி வழங்குவாயாக.
* முதலும் முடிவும் இல்லாதவளே! ஆதிலட்சுமியே! தஞ்சமென வந்தவரைத் தாங்கும் தயாபரியே! மகாவிஷ்ணுவின் இதயகமலத்தில் வாழ்பவளே! நிலவைப் போல குளிர்ச்சி மிக்க பார்வையால் எங்கள் மீது அருள்மழை பொழிவாயாக.
* நவரத்தின ஆபரணங்களை விரும்பி அணிபவளே! செவ்வானம் போல சிவந்த மேனிவண்ணம் கொண்டவளே! குறையில்லா வாழ்வு தரும் கோமளவல்லியே! செங்கமலத் தாயாரே! அபயக்கரம் நீட்டி எங்களை ஆதரிக்க வேண்டும் அம்மா!
* மங்கல ரூபிணியே! பசுவின் அம்சம் கொண்டவளே! வரம் தரும் கற்பகமே! சிவந்த தாமரையை மலரை விரும்பி ஏற்றவளே! லோகமாதாவே! உன் அருளால் இந்த உலகமெலாம் செழித்தோங்கட்டும். உயிர்கள் எல்லாம் இன்புற்று வாழட்டும்.