பதிவு செய்த நாள்
02
மே
2014
12:05
ஸ்ரீ வில்லிபுத்தூர்: சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனில், குண்டு வெடித்ததன் எதிரொலியாக, விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு, அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதால், ஓராண்டாக மெட்டல் டிடெக்டர் மூலம், பக்தர்கள் சோதனை செய்யப்படுகின்றனர். மேலும், ராஜகோபுரத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார், தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஆண்டாள், வடபத்ரசாயி கோயில்கள், மாட வீதிகளை சுற்றி, 42 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுகிறது. நேற்று, சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனில், ரயிலில் நடந்த குண்டு வெடிப்பிற்கு பின், இக்கோயிலில், டி.எஸ்.பி., முரளீதரன் தலைமையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள், கோயிலுக்கு வரும் பக்தர்களையும், கோயிலை சுற்றி சந்தேகத்திற்கு இடமானவர்களையும் தீவிரமாக விசாரிக்கின்றனர். டி.எஸ்.பி., முரளீதரன் கூறுகையில், "நேற்று முன்தினம் வரை, 30 போலீசார், இக்கோயில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர். இன்று (நேற்று) முதல், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., உட்பட 60 போலீசார், 24 மணி நேரமும், இரண்டு ஷிப்டாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முழுமையாக சோதனைக்குப்பின்னரே, பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்,” என்றார்.