பதிவு செய்த நாள்
03
மே
2014
11:05
திருவாரூர்: சங்கீத மும்மூர்த்திகள் ஜெயந்தி விழாவில், சாஸ்வதி பிரபு உள்ளிட்ட கலைஞர்களின் இசை மற்றும் பாட்டு நிகழ்ச்சி நடந்தது. கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்ஷிதர், ஷியாமா சாஸ்திரிகள் ஆகியோரின் பிறந்தநாள் விழா, காஞ்சி காமகோடி பீட சேவா சமிதி சார்பில், திருவாரூரில் ஆண்டுதோறும் நடந்து வருகிறது. இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகள், திருவாரூர் தியாகராஜ ஸ்வாமி கோவில் வளாகத்தில், நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில், சங்கீத கலாநிதி பம்பாய் சகோதரிகள் பாட்டு, சீனிவாஸ், ராஜேஷ் ஆகியோர் மாண்டலின் டூயட், ஷேக் மெகபூப் சுபானி
குழுவினரின் நாதஸ்வர இசை ஆகியவை நடந்தன. இரண்டாம் நாளான நேற்று, திருமெய்ஞானம் சகோதரர்களின் நாதஸ்வர இசை, சென்னை மடிப்பாக்கம் மாலினி பாலாஜி யின் பரதநாட்டியம், சென்னை
சாஸ்வதி பிரபுவின் பாட்டு, ஜெயந்தி குமரேஷ் குழுவினரின் வீணை இசை, மதுரை கிருஷ்ணா குழுவினரின் பாட்டு ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. மெய் மறக்கச்செய்த, சாஸ்வதி பிரபுவின் பாட்டுக்கு, விஜய்கணேஷ் வயலின், அர்ஜுன் கணேஷ் மிருதங்கம், சந்திரஜித் தபேலா, நாகரத்தினம் ஸ்பெஷல் எபெக்ட் இசைத்தனர்.
விழா ஏற்பாடுகளை, சேவா சமிதி பொறுப்பாளர்கள் மடிப்பாக்கம் சாமிநாதன், பக்தவத்சலம், இன்ஜினியர் கந்தவேலு உட்பட பலர் செய்தனர். வரும், 6ம் தேதி வரை, மாலை, 6:00 மணி முதல், இரவு, 9:00 மணி வரை, இசை கச்சேரிகள் நடக்கின்றன. பல்வேறு இசைக் கலைஞர்கள் பாடுகின்றனர்.