பதிவு செய்த நாள்
03
மே
2014
11:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு, நாளை முதல், வரும், 28ம் தேதி வரை, தாராபிஷேகம் நடக்கிறது.கோடை காாலத்தில், பொதுமக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திரம், நாளை துவங்கி, வரும், 28ம் தேதி வரை நடக்கிறது. அதனால், கடுமையான வெயிலும், எதிர்பாராத நேரங்களில், கோடை மழையும் பெய்யும். அக்னி நட்சத்திர நாட்களில், சிவன் கோவில்களில், தாராபிஷேகம் நடப்பது வழக்கம்.அதன்படி, திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், அக்னி வடிவான அண்ணாமலையாரின் திருமேனியை குளிர்விக்கும் வகையில், நாளை முதல் வரும், 28ம் தேதி வரை, தாராபிஷேகம் நடக்கிறது. தினமும் உச்சிகால பூஜை நேரமான காலை, 10 மணிக்கு துவங்கி, சாயரட்சை பூஜை நடைபெறும் மாலை, 6 மணி வரை, ஸ்வாமிக்கு தாராபிஷேகம் நடக்கும்.அக்னி நட்சத்திர நாட்களில், வழக்கமான பூஜைகள், நடை திறக்கும் நேரம், ஆகியவற்றில் எந்த மாற்றமும் இல்லை, அக்னி நட்சத்திர நாட்களில், சித்திரை வசந்த உற்சவமும், சித்ரா பவுர்ணமியும் நடப்பது குறிப்பிடத்தக்கது.அதேபோல், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள திருநேர் அண்ணாமலையார் கோவில், அய்யங்குளம் எதிரில் உள்ள அருணகிரிநாதர் கோவில் ஆகியவற்றிலும், அக்னி நட்சத்திர நாட்களில், ஸ்வாமிக்கு தாராபிஷேகம் நடக்கும்.