பதிவு செய்த நாள்
05
மே
2014
02:05
தஞ்சாவூர்: திருவையாறிலுள்ள ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலில் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக கடந்த 3ம் தேதி துவங்கியது. இவ்விழா வரும் 15ம் தேதி வரை 13 தினங்கள் நடக்கிறது. இதையொட்டி, தினந்தோறும், பக்தர்கள் திரளாக பங்கேற்று ஸ்வாமி தரிசனம் செய்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம், திருவையாறு ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலில் வருடம்தோறும் சித்திரை திருவிழா விமரிசையாக நடத்தப்படும். அதன்படி, நடப்பாண்டு சித்திரை திருவிழா கடந்த 3ம் தேதி துவங்கியது.கொடியேற்றம் நிகழ்ச்சியில் ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் பங்கேற்று, விழாவை துவக்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் ஸ்வாமி ஊர்வலம் நடக்கிறது.தொடர்ந்து, வரும் 7ம் தேதி மாதல 5 மணிக்கு தன்னைத்தானே பூஜித்தல் நிகழ்ச்சி நடக்கிறது. சுற்றுவட்டாரத்திலுள்ள ஆறு கிராமங்களிலிருந்து ஐயாறப்பர் ஸ்வாமி கோவிலுக்கு ஊர்வலமாக, ஸ்வாமி ஊர்வலம் வந்தடைந்து, சன்னதி முன்பு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடக்கிறது. இதையடுத்து, 11ம் தேதி தேரோட்ட விழா விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தேரோட்டத்தில், ஐயாறப்பர் ஸ்வாமி, அறம்வளர்த்த நாயகியுடன் வலம் வந்து, பஞ்சமூர்த்திகளுடன் திருவையாறு நகரத்தின் நான்கு வீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். தேர் நிலைக்கு வந்தவுடன் காவிரியாற்றில் வாண வேடிக்கையுடன் இசை நிகழ்ச்சி நடக்கிறது. பின்னர், முக்கிய விழாவாக, சப்த ஸ்தான பெருவிழா 14ம் தேதி நடக்கிறது. முன்னதாக, அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பர் ஸ்வாமி கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வரர் ஸ்வாமி சுயசாம்பிகையுடன் வெற்றி வேர் பல்லக்கிலும் புறப்பட்டு, திருப்பழனம், திருச்சோற்றுத்துறை, திருவேதிக்குடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி ஆகிய பகுதிகளுக்கு சென்று, இரவில் காவிரியாற்றில் ஆறு கிராம பல்லக்குகளும் தில்லை ஸ்தானத்தில் ஒன்றுசேர்கிறது.15ம் தேதி தில்லைஸ்தானம் பல்லக்குடன் ஏழு பல்லக்குகளும், திருவையாறு வீதிகளில் வீதியுலா வந்து, தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது. முடிவில், ஆறு கிராம பல்லக்குகுளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை முடிந்து, அந்தந்த ஊர்களிலுள்ள கோவிலை சென்றடைகிறது. ஒவ்வொருநாளும் சுற்றுவட்டார கிராமப்பகுதி மக்கள், பக்தர்கள் திரளாக பங்கேற்று, ஸ்வாமியை வழிபட்டு வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டை தருமபுரம் ஆதீன கட்டளை விசாரணை குமாரசாமி தம்பிரான் ஸ்வாமிகள் தலைமையில் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்துள்ளனர்.