பதிவு செய்த நாள்
06
மே
2014
10:05
மணப்பாறை: மணப்பாறை அருகே மழைவேண்டி கிராமமக்கள் பத்திரிக்கை கொடுத்து, விருந்து வைத்து கழுதைகளுக்கு திருமணம் செய்துவைத்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை தாலுகா வையம்பட்டி அருகே வத்தமணியாரம்பட்டி கிராமம் உள்ளது. இக்கிராமமக்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியுள்ளனர். கடந்த மூன்றாண்டுக்கும் மேலாக மழையின்றி வறட்சி ஏற்பட்டதால், விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டது. கிணறுகளும் தண்ணீர் இன்றி வறண்டன. பல்லாயிரக்கணக்கான தென்னை, மா, கொய்யா, எலுமிச்சை போன்ற பலவகையான மரங்களும் மழையின்றி காய்ந்து விட்டது. கால்நடைகளும் தீவனமின்றி மிக குறைந்த விலைக்கு விற்பனை செய்ததுடன், மக்கள் வேறு தொழில்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். குடிநீருக்கும் பற்றாக்குறை ஏற்பட்டு, குடிநீரையும் காசுகொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
கழுதைக்கு திருமணம் செய்து வைத்தால் மழைபெய்யும் என, முன்னோர் கூறியதை, அடிப்படையாக வைத்து, இப்பகுதி மக்கள் ஒன்று சேர்ந்து, கழுதைகளுக்கு திருமணம் செய்துவைக்க முடிவு செய்தனர். பஞ்சகல்யாணிக்கு திருமணம் செய்ய, பஞ்சகல்யாண அழைப்பிதழ் என்ற பெயரில் பத்திரிக்கை அச்சிட்டு, ஒவ்வொரு வீடு மற்றும் தங்களது உறவினர்களுக்கும் கொடுத்தனர்.திருமணத்துக்கான தங்கத்தாலி, புடவை, வேஷ்டி, துண்டு, மாலை ஆகியவைகளை பொதுமக்கள் ஒன்று சேர்த்து வாங்கி வந்தனர். வத்தமணியாரம்பட்டி விநாயகர் கோவிலில் பந்தல் அமைத்து நேற்று காலை ஆண், பெண் கழுதைகளுக்கு பொதுமக்கள் முன்னிலையில் திருமணம் நடத்தப்பட்டது. திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கு அறுசுவை விருந்தும் அளித்தனர். நடுப்பட்டி பஞ்சாயத்து தலைவர் கண்ணன், சுப்பிரமணி குருக்கள் உட்பட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.திருமணத்திற்கு வந்திருந்தவர்கள் அனைவரும் மொய் கொடுத்துச்சென்றனர். திருமணம் முடிந்த சிறிது நேரத்தில் திடீரென மழைபெய்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.