பதிவு செய்த நாள்
06
மே
2014
11:05
தேனி : தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா தொடங்கியதையடுத்து, இன்று அதிகாலை முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில் திருவிழா, இன்று(மே 6) தொடங்கி வரும் 13ம் தேதி வரை எட்டு நாட்கள் நடக்கிறது. தினமும் இரண்டரை லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, திண்டுக்கல், மதுரை, தேனி மாவட்டத்தின் முக்கிய ஊர்களில் இருந்து, வீரபாண்டிக்கு 24 மணி நேரமும் 180 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. தவிர தேனி, ஆண்டிபட்டி, போடி, பெரியகுளம், சின்னமனூர், கம்பம் பகுதியில் இருந்து கூட்டத்திற்கு ஏற்ப 5 நிமிடம் முதல் 10 நிமிடத்திற்கு ஒரு பஸ்கள் இயக்கப்படும். தேனி வழித்தடத்தில் இருந்து, வீரபாண்டி வரும் பஸ்கள் ஆவின் பாலக திடல் அருகிலும், கம்பம் வழித்தடத்தில் இருந்து வரும் பஸ்கள், கல்லூரி முகப்பில் உள்ள திடலிலும் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பஸ்ஸ்டாண்ட்களில் நிறுத்தப்படும். இடைப்பட்ட நான்கு கி.மீ., தூரம், வாகனங்கள் செல்ல முடியாது. பொதுமக்கள் நடந்து செல்ல வேண்டும். ஆற்றில் பொதுமக்கள் பாதுகாப்பாக குளிக்கவும், தண்ணீரில் சிக்கியவர்களை மீட்கவும் 24 மணி நேரமும் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றம்: இந்த ஒரு வாரத்திற்கு, தேனியில் இருந்து சின்னமனூர் வரை செல்லும் பஸ்கள் உப்புக்கோட்டை, குச்சனூர் வழியாக சின்னமனூர் செல்லும். கம்பத்தில் இருந்து தேனி வரும் பஸ்கள், தாடிச்சேரி விலக்கு வழியாக வந்து தப்புக்குண்டு, தாடிச்சேரி, கொடுவிலார்பட்டி, அரண்மனைப்புதூர் வழியாக தேனி வரும், என அதிகாரிகள் தெரிவித்தனர்.