செஞ்சி: செஞ்சி கோட்டை ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன் கோவில் 10 நாள் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவையொட்டி நேற்று காலை 9 மணிக்கு எம்.ஜி.ஆர்., நகர் மாரியம்மன் கோவிலில் கலச பிரதிஷ்டை செய்து, கணபதி பூஜை, லஷ்மி பூஜை மற்றும் சிறப்பு ஹோமத்துடன், தர்ப கொடியேற்றினர். மாலை 3 மணிக்கு கமலக்கன்னியம்மன், காளியம்மனுக்கு பொதுமக்கள் ஊரணி பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இரவு சாமி வீதி உலாவும், கலை நிகழ்ச்சியும், வாண வேடிக்கையும் நடந்தது. தேர் திருப்பணி செஞ்சி கமலக்கன்னியம்மன் தேர்திருவிழா பாரம்பரியம் மிக்க திருவிழா. இதற்கென நிலையான தேர் இல்லாமல் இருந்து வந்தது. தற்போது. பீரங்கிமேடு பொது மக்கள் சார்பில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் புதிய தேர் கட்டும் பணிகள் நேற்று துவங்கியது. இதை முன்னிட்டு மாரியம்மன் கோவிலில் காலை 6 மணிக்கு கணபதி, வாஸ்து பூஜை நடந்தது. கமலக்கன்னியம்மன் கோவில் அறங்காவலர் அறங்க ஏழுமலை மற்றும் உபயதாரர்கள் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். பூஜைகளை அரிஹரன் ஐயர் செய்தார். அனுமதி இலவசம் பாரம்பரியம் மிக்க கமலக்கன்னியம்மன் கோவில் திருவிழா நடைபெறும் 10 நாட்களுக்கும் ராஜகிரி மலை மீதுள்ள கமலக்கன்னியம்மன் கோவிலுக்கு பொதுமக்கள் சென்று வர ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இலவச அனுமதி அளித்துள்ளனர். அதன் படி செஞ்சி கோட்டை ராஜகிரி மலைக்கு செல்வதற்கு நேற்று முதல் இம்மாதம் 14ம் தேதி வரை இந்திய தொல்லியல் துறையினர் இலவச அனுமதி அளித்துள்ளனர்.