இதைவிடப் புண்ணியம் வேறில்லை: மதுரை சித்திரைத்திருவிழாவின் 6ம் நாளான நேற்று மீனாட்சியம்மன் வெள்ளி ரிஷப
வாகனத்திலும், சுந்தரேஸ்வரர் பிரியாவிடையிடன் தங்க ரிஷப வாகனத்திலும் உலா
வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். எராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிவபெருமானுக்குரிய வாகனங்களில் சிறப்பானது ரிஷபவாகனம். சிவபெருமானை மற்ற வாகனங்களில் தரிசிப்பதைவிட, ரிஷபத்தில் தரிசிப்பது புண்ணியம் மிக்கது. தர்மதேவதையே ரிஷப வாகனமாக வந்து இறைவனை தாங்கி நிற்பதாக ஐதீகம். நாயன்மார்கள் அறுபத்துமூவரில் திருஞான சம்பந்தர் குறிப்பிடத்தக்கவர். மூன்றுவயது பாலகனாக இருந்தபோது, அவரது தந்தை சிவபாத இருதயர் அவரை அழைத்துக் கொண்டு தோணியப்பர்கோயில் குளத்தில் நீராடச் சென்றார். குழந்தையை கரையில் அமர்த்தி விட்டு குளத்திற்கு சென்றாõர். பசியால் வாடிய சம்பந்தர் அம்மா என்று அழ, இறைவனால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. தான் மட்டும் வராமல், அம்மா என்று அழைத்ததால் உலகன்னையாகிய பார்வதியையும் அழைத்து வந்தார். அம்பிகை சம்பந்தரைக் கையில் வாரி எடுத்து, பொற்கிண்ணத்தில் ஞானப்பால் கொடுத்து மறைந்தாள். கரையேறிய சிவபாத இருதயர், பால் சிந்திய வாயோடு நின்றிருந்த சம்பந்தரிடம் கோபம் கொண்டார். குச்சியொன்றைக் கையில் எடுத்து மிரட்டி, உனக்கு பாலூட்டியது யார் என்று கேட்க, குழந்தை ஞானத்தமிழால் பாடத் துவங்கியது. தோடுடைய செவியன்... என்ற முதல் தேவாரப்பாடல் அரங்கேறியது. அப்போது அம்மையும், அப்பனும் ரிஷபவாகனத்தில் காட்சி தந்தனர். சம்பந்தர் பெற்ற ஞானக்காட்சியை நாமும் பெறவேண்டும் என்பதற்காக சுந்தரேஸ்வரரும், மீனாட்சியும் ரிஷபவாகனத்தில் பவனி வருகின்றனர். ரிஷப வாகன தரிசனமே பிற வாகன தரிசனங்களை விட மிகுந்த புண்ணியம் தரும்.