பதிவு செய்த நாள்
07
மே
2014
10:05
கடலூர்: திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது. கடலூர் அடுத்த திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவத்தையொட்டி நேற்று காலை, மூலவருக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது. மூலவர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். பின்னர், கொடியேற்றம் நடந்தது. தேவநாத சுவாமி ஸ்ரீதேவி, பூதேவி சகிதமாக வீதியுலா நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இரவு ஹம்ஸ வாகனத்தில் வீதியுலா நடந்தது. 9ம் தேதி, காலை தங்க விமானத்தில் வேணு கோபாலன் சேவை, இரவு சேஷ வாகனத்தில் பரமபதநாதன் சேவையும், 11ம் தேதி, மாலை மஞ்சள் நீராட்டு, இரவு யானை வாகனத்தில் வீதியுலா, 12ம் தேதி, காலை வெண்ணைத் தாழி உற்சவம், இரவு மகாமேரு தெருவடைச்சான் உற்சவமும் நடக்கிறது. தொடர்ந்து, 13ம் தேதி காலை பேட்டை உற்சவம், இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் வீதியுலா, 14ம் தேதி அதிகாலை 4:20 மணிக்கு மேல் 6:00 மணிக்குள் திருத்தேர் உற்சவமும், மாலை மதுரகவி ஆழ்வார் உற்சவ சாற்றுமுறை, இரவு பானக பூஜை அவரோஹணம் நடக்கிறது. 15ம் தேதி காலை தங்கப் பல்லக்கில் வீதியுலா, இரவு தெப்பல் உற்சவமும், 16ம் தேதி, காலை துவாதச ஆராதனம், 25ம் தேதி மாலை விடையாற்றி சாற்றுமுறை நடக்கிறது.