பதிவு செய்த நாள்
07
மே
2014
12:05
பொள்ளாச்சி : பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவ விழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. பொள்ளாச்சி கரிவரதராஜப்பெருமாள் கோவிலில், பிரமோத்ஸவம் விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் மாலை 5:30 மணிக்கு அனுக்ஞை, வாஸ்து சாந்தியும், தொடர்ந்து, நேற்று காலை 7:30 மணிக்கு மேல் 9:00 மணிக்கு மேல் கொடியேற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தன. விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் இடம்பெற்றன. பின், கொடிக்கம்பத்தில், கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, மாலை 5:00 மணிக்கு புண்யாக வாஜனம், யாக சாலை துவக்கம், மாலை 6:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் பெருமாள் ராஜ அலங்காரத்துடன் திருவீதியுலா செல்லும் நிகழ்ச்சியும் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருவிழாவையொட்டி, காலை மற்றும் மாலை நேரங்களில், சிறப்பு ேஹாமங்கள் உள்ளிட்ட பூஜைகள் நடைபெறுகின்றன. மேலும், இருவேளையும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சிகளும் இடம்பெறுகின்றன. அதன்படி, இன்று காலை 9:00 மணிக்கு திருப்பல்லக்கு வெங்கடாஜலபதி அலங்காரம்; மாலை 6:00 மணிக்கு அன்னபட்சி வாகனத்தில், ஆண்டாள் அலங்காரத்தில் திருவீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, நாளை அனுமார் வாகனத்திலும்; 9ம் தேதி சேஷ வாகனத்திலும், 10ம் தேதி கருட வாகனத்திலும், 11ம் தேதி யானை வாகனத்திலும் பெருமாள் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின் 12ம் தேதி திருக்கல்யாண உற்சவமும்; 13ம் தேதி குதிரை வாகனத்திலும் வீதி உலா செல்லும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து, 14ம் தேதி காலை 6:00 மணிக்கு மேல் 7:30 மணிக்குள் தேரில், பெருமாள் எழுந்தருளல், 9:00 மணிக்கு மேல் 10:30மணிக்குள் வடம்பிடித்தல் நிகழ்ச்சியும்; மாலை 6:00 மணிக்கு திருவீதியுலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 15ம் தேதி காலை 6:00 மணிக்கு தீர்த்த வாரியும்; மாலை 3:30 மணிக்கு துவாதச ஆராதனம், மாலை 6:00 மணிக்கு புஷ்ப பல்லக்கு திருவீதியுலாவும்; 16ம் தேதி காலை 7:00 மணிக்கு விடையாற்றி நிகழ்ச்சியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் வெண்மணி, உதவி ஆணையர் அனிதா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.