மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகேயுள்ள கரிவரதராஜ பெருமாள்கோவில் கல்வெட்டுக்களை படியெடுத்து மக்கள் பார்வைக்கு வைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மடத்துக்குளம் பகுதியில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பல கோவில்கள் உள்ளன. இதில் குறிப்பிடும்படியாக உள்ளது கொமரலிங்கம் அமராவதி ஆற்றுப்பாலம் பகுதியில் அமைந்துள்ள கரிவரதராஜபெருமாள் கோவில். கடந்த ஆயிரத்து 300 ஆண்டுகளுக்கு முன், சோழர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட இந்த கோவில், 30 ஆண்டுகளுக்கு முன் சிலைகள் சேதப்படுத்தப்பட்டு பூட்டப்பட்டது. பல ஆண்டுகளுக்கு பின் இந்து அறநிலையத்துறையினர் இந்தகோவிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து புதுப்பிக்க தீர்மானித்தனர். கடந்த மார்ச் மாதம் 27ம் தேதிஅறநிலையத்துறையின் அதிகாரிகள் முன்னிலையில் மீண்டும் கோவில் திறக்கப்பட்டது. இந்த கோவிலின் உட்சென்றவர்கள் கோவில் கட்டுமானப்பணி மற்றும் கட்டட அமைப்பைகண்டு வியந்தனர். மிகவும் நுணுக்கமாக, பல்வேறு சிறப்புக்களுடன் இந்த கோவில் அமைக்கப்பட்டிருந்தது. அகழி, சுற்றுமண்டபம், நீர்வரத்து, வெயில் உட்புகும் அமைப்பு ஆகியவை இருந்தன. இந்த கோவிலின் சுற்றுமதில் மற்றும் உட்புற சுவர்களில் வட்டெழுத்த முறையில் பல்வேறு கல்வெட்டுக்கள் அமைந்துள்ளன. இந்த கல்வெட்டுக்களில் கோவில் குறித்தும், ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வாழ்க்கை முறை குறித்தும் பல அரிய தகவல்கள் உள்ளதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், இந்த கல்வெட்டுக்களில் உள்ள தகவல்களை படியெடுத்து பொதுமக்கள் பார்வைக்கு வைத்தால், இன்னும் பல அரிய தகவல்கள் கிடைக்கும். இந்த தகவல்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். இது குறித்து இந்துசமயஅறநிலையத்துறையினர் மற்றும் தொல்பொருள்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.