பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
பவானி: பவானி, சங்கமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா குறித்த, கலந்தாய்வு கூட்டம் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில், பிரசித்தி பெற்ற கோவிலில் ஒன்றான, பவானி சங்கமேஸ்வரர் கோவில் மஹா கும்பாபிஷேக விழா, ஜூன், ஒன்பதாம் தேதி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக, பெருமாள் கோவில் முன், கோடி அர்ச்சனை மண்பட முன்பகுதியில் யாகசாலை அமைப்பதற்காக முகூர்த்தக்கால் நடப்பட்டது. கும்பாபிஷேகம் நடத்துவது குறித்த கலந்தாய்வு கூட்டம் நடந்தது. கோவில் சார்பில், மூன்று கோடி ரூபாய் மதிப்பீட்டிலான பணிகள் நடந்து வருகிறது. உபயதாரர்கள் மூலம், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் குறித்தும், ஜூன், ஒன்பதாம் தேதி நடக்க உள்ள கும்பாபிஷேகத்தின் போது, திருப்பணி வேலைகள், குடமுழுக்கு பணிகளை விரைவாக முடிப்பது, குடமுழுக்கு செலவுகள், பக்தர்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள், அன்னதானம் வழங்குதல் போன்றவைகள் குறித்து ஆலோசித்தனர். கும்பாபிஷேக விழாவை, அசம்பாவிதங்கள் இன்றி, விமரிசையாக நடத்தவும், அதற்கு முன்பாக, தேவையான பணிகளை முடிக்கவும் முடிவு செய்தனர். பவானி எம்.எல்.ஏ., நாராயணன், பவானி நகராட்சி தலைவர் கருப்பணன், குமாரபாளையம் நகராட்சி தலைவர் தனசேகரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் கிருஷ்ணராஜ், ஈரோடு மாவட்ட பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் பழனிசாமி, ஆப்டிமஸ் சின்னுசாமி, அறநிலைய துறை இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பழனிகுமார், சங்கமேஸ்வரர் கோவில் குருக்கள் ஞானமணி, சாமிநாதன், பாலாஜி சிவம், சுப்ரமணியம், பட்டாச்சாரியர்களான வெங்கடேசன், திருமலைசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.