பதிவு செய்த நாள்
07
மே
2014
02:05
வாழப்பாடி: வாழப்பாடி அருகே பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், வருண ஜபம் மற்றும் சிறப்பு வேள்வி வழிபாடு நடந்தது. விவசாயத்தை பிரதான தொழிலாக கொண்டுள்ள வாழப்பாடி பகுதியில், கடந்த, இரு ஆண்டாக பருவ மழை பொய்த்து போனதால், கடும் வறட்சி ஏற்பட்டது. அதனால், புழுதிக்குட்டை ஆணைமடுவு அணை, பாப்பநாயக்கன்பட்டி கரியகோவில் அணை உள்ளிட்ட அனைத்து நீர்நிலைகளும் அடியோடு வறண்டு போயின.
விவசாய கிணறுகளும், போர் வெல்களும் வறண்டதோடு, நிலத்தடி நீர்மட்டமும் சரிந்து போனதால், பாசனத்திற்கு மட்டுமின்றி குடிநீருக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நீண்டகால பலன் தரும் பாக்கு மற்றும் தென்னை மரங்கள் காய்ந்து கருகியதால், அவற்றை விவசாயிகள் வெட்டி வீழ்த்தும் பரிதாபம் நேர்ந்தது. இந்நிலையில், வாழப்பாடி பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற பேளூர் தான்தோன்றீஸ்வரர் கோவிலில், வருண ஜபம் மற்றும் சிறப்பு வேள்வி பூஜை வழிபாடு நடத்த ஏற்பாடு செய்தனர். வருண ஜபம் அறிவித்த தினமே, வாழப்பாடி பகுதியில் பலத்த மழை பெய்ததால், அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். நேற்று, பேளூர் தான்தோன்றீஸ்வரர் மற்றும் அறம்வளர்த்த நாயகி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. தொடர்ந்து, மூன்று வேத விற்பன்னர்கள் தண்ணீர் நிரம்பிய பாத்திரத்திற்குள் அமர்ந்து வருண ஜபம் நடத்தினர். யாக சாலை பொருட்களை கொண்டு, சிறப்பு வேள்வி பூஜையும் நடத்தப்பட்டது. அந்ந சிறப்பு பூஜை வழிபாட்டில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு மழை வேண்டி பிராத்தனை செய்தனர். இந்நிலையில், நேற்று மாலையே வாழப்பாடி பகுதியில் பலத்த மழை பெய்தது.