பதிவு செய்த நாள்
09
மே
2014
10:05
ஆர்.கே.பேட்டை : சித்திரை பிரம்மோற்சவத்தில், நாகேஸ்வர சுவாமி, இன்று தேரில் பவனி வருகிறார். நேற்று முன்தினம், ரிஷப வாகனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். பெரிய நாகபூண்டி நாகவள்ளி உடனுறை நாகேஸ்வர சுவாமி கோவில், ராகு பரிகார ஸ்தலமாக விளங்குகிறது. திங்கட்கிழமைகளில் ராகு பரிகார பூஜை நடந்து வருகிறது. மூலவரை, நாகம் பூஜித்ததாக தல வரலாறு கூறுகிறது. மூல ஸ்தானத்தில் தொடர்ந்து, ஊற்று நீர் சுரந்து வருவது சிறப்பு. கோவிலின் சித்திரை பிரம்மோற்சவம், கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கேடய உலா உற்சவம் மற்றும் சேஷசயன வாகனம், யானை, பூதம் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி உலா வருகிறார். நேற்று முன்தினம் இரவு ரிஷப வாகனத்தில் உலா வந்தார்.பிரம்மோற்சவத்தின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடக்கிறது. காலை 5:00 மணிக்கு அபிஷேகம், ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து 8:30 மணிக்கு தேர் புறப்பாடு நடக்கும். தேர், மாடவீதிகளின் வழியாக வலம் வரும். மாலை 5:00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தடையும். இரவு, 8:00 மணிக்கு உற்சவர் உலா வருகிறார். நாளை திருக்கல்யாணம் நடைபெறும்.