பதிவு செய்த நாள்
09
மே
2014
11:05
மதுராந்தகம் : மதுராந்தகம் கோதண்ட ராமர் கோவிலில், போதிய அர்ச்சகர்கள் இல்லாததால், பல சன்னிதிகள் மூடியே கிடக்கின்றன. மதுராந்தகம் நகரில் புகழ்பெற்ற, ஏரி காத்த கோதண்டராமர் கோவில் உள்ளது. பெருமாள், தாயார், ஆஞ்சநேயர், ஆண்டாள், நரசிம்மர், உடையவர், தேசிகர் சக்கரத்தாழ்வார், ராமானுஜர், கருடாழ்வார் ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் உள்ளன. அர்ச்சகர் ஓய்வு : இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள, கோவிலுக்கு தினமும் ஐநூறுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். விசேஷ நாட்களில் வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வருகின்றனர். இங்குள்ள அனைத்து சன்னிதிகளின் திருப்பணிகளையும், ஐந்து அர்ச்சகர்கள் செய்து வந்தனர். இந்த நிலையில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், இந்த ஐந்து அர்ச்சகர்களில், இருவர் வேறு கோவில்களுக்கு மாறுதல் ஆயினர். கடந்த ஆண்டு மற்றொரு அச்சகர்கரும் ஓய்வு பெற்றுவிட்ட நிலையில், அவரே தினக்கூலி பணியாளராக நியமிக்கப்பட்டு, தற்போது 3 அர்ச்சர்கள் தான், ஐந்து சன்னிதி திருப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், பெரும்பாலான நாட்களில், சில சன்னிதி கள் திறக்கப்பட்டாமல் மூடியே வைக்கப்பட்டு உள்ளன. இதனால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுவாமியை சேவிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். தங்கள் குறையை புகாராக தெரிவிக்க, இக்கோவிலுக்குகென, நிரந்தர செயல் அலுவலர் கடந்த மூன்று ஆண்டுகளாக நியமிக்கப்படாததால், அதுவும் முடியாமல் போகிறது.
பரிந்துரை : எனவே, இக்கோவிலுக்கு என, நிரந்தர செயல் அலுவலரை நியமித்து, கூடுதல் அர்ச்சகர்களை பணியில் அமர்த்த இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து, அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், இதுகுறித்து மேலதிகாரிகளிடம் தெரிவித்து உள்ளோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.