வைகை ஆற்றில் எழுந்தருள.. கள்ளழகர் வாகனங்கள் மதுரை வந்தன!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10மே 2014 10:05
அழகர்கோவில் : மதுரையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுவதற்காக அழகர்கோவிலில் இருந்து அவரது வாகனங்கள் மதுரைக்கு எடுத்து வந்தனர். அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நடக்கும் முக்கியமானது சித்திரை திருவிழா. ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமி அன்று வைகை ஆற்றில் எழுந்தருளி லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். வரலாற்று சிறப்பு மிக்க இத்திருவிழா, அழகர்கோவிலில் இன்று துவங்குகிறது. இன்றும், நாளையும் பல்லக்கில் எழுந்தருளும் சுந்தரராஜ பெருமாள் கோயிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக மே 12 மாலை 5 மணிக்கு அழகர்கோவிலில் இருந்து தங்கப் பல்லக்கில், கள்ளழகர் திருக்கோலத்தில் புறப்படுகிறார். வழியில் பக்தர்கள் அமைத்திருக்கும் 407 திருக்கண் மண்டகபடிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மே 13 காலை 6 மணிக்கு மூன்றுமாவடியிலும், மாலையில் தல்லாகுளத்திலும் எதிர்சேவை நடக்கிறது. மே 14ல் காலை 6 மணிக்கு தங்க குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளுகிறார். வண்டியூரில் சேஷ வாகனத்திலும், பின் கருட வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். கள்ளழகர் எழுந்தருளும் 3 வாகனங்களும் நேற்று அழகர்கோவிலில் இருந்து மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.