பதிவு செய்த நாள்
10
மே
2014
10:05
ஆர்.கே.பேட்டை : பெரிய நாகபூண்டி நாகேஸ்வரர் கோவில் தேர் திருவிழா, நேற்று நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். ெபரிய நாகபூண்டி நாகவள்ளி உடனுறை நாகேஸ்வரர் கோவில், சித்திரை பிரம்மோற்சவம், கடந்த, 3ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. இதில் தினமும், கேடய உலா உற்சவம், வாகன உலா உள்ளிட்டவை நடந்து வருகின்றன. நேற்று காலை, தேர் திருவிழா நடந்தது. காலை, 8:30 மணிக்கு, கோவில் வளாகத்தில் இருந்து தேர் புறப்பாடு நடந்தது. திருத்தணி சுப்ரமணிய சுவாமி கோவில் தக்கார், ஜெய்சங்கர், ஆளும் கட்சி வேட்டி அணிந்து தேரை வடம் பிடித்து இழுத்தார். நாகபூண்டி, மரிக்குப்பம், வெங்கடபெருமாள் ராஜபுரம், வீரமங்கலம், அம்மையார்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், கலந்து கொண்டு, தேரை வடம்பிடித்து இழுத்தனர்.மாலை, 5:00 மணிக்கு தேர் நிலைக்கு வந்தது. இரவு, 8:00 மணியவில் உற்சவர் வீதியுலா வந்தார்.இன்று இரவு நாகவள்ளி, நாகேஸ்வர சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. நாளை மட்டையடி திருவிழாவும், அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி உலாவும் நடைபெறும்.