பதிவு செய்த நாள்
10
மே
2014
10:05
பரமக்குடி : பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலின் கோடைத் திருநாள் எனும் சித்திரைத் திருவிழா நேற்று காப்புக்கட்டுடன் துவங்கியது. நேற்று காலையில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகத்திற்கு பின் காப்பு கட்டப்பட்டது. பின்னர் தீர்த்த குடங்கள் புறப்பாடாகி யாகசாலையை அடைந்தன. மாலையில் பெருமாள் சர்வ அலங்காரத்தில் வலம் வந்தார். தொடர்ந்து நான்கு நாட்கள் காலை, மாலையில் யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனை நடைபெறும். மே 13ம் தேதி, காலை 10.30 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 2 மணிக்கு சுந்தரராஜப் பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்துடன் வேல், கம்பு, ஈட்டி ஏந்தி, கோடாரி கொண்டையிட்டு, ஆயிரக்கணக்கான தீவட்டிகள் வெளிச்சத்தில், புஷ்பபல்லக்கில் எழுந்தருள்கிறார். பின்னர் வைகை ஆற்றில் இறங்குகி அருள்பாலிக்கிறார். மே 14ம் தேதி காலை 9 மணிக்கு, குதிரை வாகனத்தில் அலங்காரமாகி, ஆயிரக்கணக்கான பக்தர்கள் மஞ்சள் நீர் தெளிக்க, பெருமாள் இரவு 9 மணிக்கு காக்காதோப்பை அடைகிறார். மே 15ம் தேதி மண்டூக மகரிஷி சாப விமோசனம், பின்னர் விடிய, விடிய தசாவதாரம் நடைபெறுகிறது. தொடர்ந்து பல மண்டகப்படிகளில் எழுந்தருளும் பெருமாள், மே 18ம் தேதி கோயிலை வந்தடைகிறார். விழாவையொட்டி கோயில் பல வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்து வருகின்றனர்.