கும்பகோணம்: திருபுவனம் பாண்டுரங்கன் பஜனை மடத்தின் சார்பில் 65ம் ஆண்டு ராதா திருக்கல்யாண மகோத்சவ விழா இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள திருபுவனத்தில் பாண்டுரங்கன் பஜனை மடம் உள்ளது. 1950ம் ஆண்டு பட்டு ஜவுளி வியாபாரி சொக்கலிங்கம் பிள்ளையால் நிர்மாணிக்கப்பட்ட பாண்டுரங்கன் பஜனை மடம் நாளடைவில் 2004ம் ஆண்டு அவரது வாரிசுகளால் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து இதுநாள் வரை புகழ்பெற்ற கலைஞர்களைக்கொண்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. சிறப்புபெற்ற பாண்டுரங்கன் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் ராதாகல்யாண மகோத்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்பேரில் இவ்வாண்டும் இன்று காலை 7 மணி முதல் வசந்த மாதவம் நிகழ்ச்சியும், தொடர்ந்து தோடயமங்களம் குரு கீர்த்தனை, கீதகோவிந்தம், அஷ்டபதியும் நடக்கிறது. மாலை 4 மணிக்கு வேத பாராயணமும், டோலோத்சவமும் நடக்கிறது. நாளை காலை 9.30 மணிக்கு ராதா திருக்கல்யாண வைபவமும், பஜனோத்சவமும் நடக்கிறது. 12.30 மணிக்கு ஆஞ்சனேய உத்சவம் நடக்கிறது. பகல் 1 மணிக்கு தீபாராதனையும், பிரசாத விநியோகமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை பாண்டுரங்கன் பஜனை மடம் மற்றும் சொக்கலிங்கம் பிள்ளை குடும்பத்தினர் செய்து வருகின்றனர்.