பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
திருத்தணி : திரவுபதி அம்மன் கோவிலில், நேற்று நடந்த தீமிதி திருவிழாவில், 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி தீமிதித்தனர். திருத்தணி பழைய தர்மராஜா கோவில் தெருவில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், கடந்த மாதம், 24ம் தேதி கொடியேற்றத்துடன் தீமிதி திருவிழா துவங்கியது.தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தன.தினமும் மதியம், 1:30 மணி முதல், மாலை, 5:30 மணி வரை, மகாபாரத தொடர் சொற்பொழிவு நடந்தது. விழாவின் நிறைவு நாளான நேற்று காலை, 9:00 மணிக்கு, துரியோதனின் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. திருத்தணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, 1000க்கும் மேற்பட்ட பெண்கள், கோவில் வளாகத்தில், பொங்கல் வைத்து, அம்மனுக்கு படைத்து வழிபட்டனர்.மாலை, 6:00 மணிக்கு, 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள், காப்பு கட்டி விரதம் இருந்து, தீ மிதித்தனர். தொடர்ந்து, திரவுபதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நிகழ்ச்சி நடந்தது.இந்த விழாவில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.