பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
தேனி : முல்லைப்பெரியாறு அணையில், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம், என, சுப்ரீம் கோர்ட் அனுமதி வழங்கியதையடுத்து, நிலவும் சூழலை கருத்தில் கொண்டு, மே 14 ல் நடைபெறும், கண்ணகி கோயில் சித்ரா பவுர்ணமி திருவிழா குறித்து, தமிழக- கேரள அதிகாரிகள் மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர்.கேரள எல்லையில், தமிழக வனப் பகுதிக்குள் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலுக்கு செல்லும் பிரதான பாதை, கேரள எல்லைக்குள் உள்ளது. இங்குள்ள பெண் தெய்வத்தை தரிசிக்க வரும் தமிழர்கள், கண்ணகியாகவும், கேரள பக்தர்கள் வனபத்திரகாளியாகவும் வழிபடுகின்றனர். இங்கு, மே 14 ல், நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவில், தமிழக, கேரள பக்தர்கள் அதிகளவு பங்கேற்பர். பக்தர்கள், கேரள வனப்பகுதிக்குள் இருந்தே, கோயிலுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால், விழா ஏற்பாடுகள் குறித்து தமிழக- கேரள அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், ஏப்.,28 ல் நடந்தது. அதன்பிறகு, கடந்த வாரம் முல்லை பெரியாறு அணையின், நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது. இதனால், கேரளாவில் அணை அமைந்துள்ள, இடுக்கி மாவட்டத்தில், சுமுகமான சூழல் இல்லை. கண்ணகி கோயில், முல்லை பெரியாறு அணையின் ஓரத்தில் அமைந்துள்ளது. சித்ரா பவுர்ணமி விழாவிற்கு வரும், இரு மாநில பக்தர்களும், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பாக, மோதல் ஏற்பட்டால், எப்படி சமாளிப்பது என 2 மாநில அதிகாரிகளுக்கும் கவலை உள்ளது. கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள், பக்தர்களை வழி நடத்தும் முறை குறித்து, தேனி, இடுக்கி மாவட்ட கலெக்டர்கள், எஸ்.பி.,க்கள் வனத்துறை அதிகாரிகள் இன்று (மே 12) கூடி, மீண்டும் ஆலோசனை நடத்த உள்ளனர். இக்கூட்டம் தேக்கடியில் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எந்த பிரச்னையும் இல்லாமல், விழா நடத்தி முடிக்க வேண்டும், என 2 மாவட்ட அதிகாரிகளும் முனைப்புடன் உள்ளனர்.