காஞ்சிபுரம் : சந்தைவெளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பால் குடம் ஊர்வலம் நடந்தது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் சந்தைவெளி அம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் சித்திரை திருவிழா ஆண்டுதோறும் நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 8:00 மணிக்கு, கோவிலிலிருந்து 108 பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அருகில் உள்ள நான்கு தெருக்கள் சுற்றி மதியம் 12:00 மணிக்கு கோவிலை வந்தடைந்தது. அதன் பிறகு அம்மனுக்கு பால் அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து 1:00 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு அம்மன் அலங்கரிக்கப்பட்டு வீதிவுலா நடந்தது.