பதிவு செய்த நாள்
12
மே
2014
11:05
மானாமதுரை : மானாமதுரை, ஆனந்தவல்லி சோமநாதர் கோவில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு, நேற்று தேரோட்டம் நடந்தது. இக்கோயிலில், மே 2ல் கொடியேற்றத்துடன் சித்திரை திருவிழா துவங்கியது. முதல் நாள் விழா, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்கி, 8ம் திருநாள் வரை சுவாமி தினமும் இரவு கிளி, யானை, பூதம், அன்னம், குதிரை, இரட்டை குதிரை, கமல வாகனங்களில் வீதி உலா வந்தார். நேற்று முன்தினம், காலை 8:30 மணிக்கு, பிரியாவிடையுடன், சோமநாதர் காசியாத்திரை சென்றார். அதை தொடர்ந்து, காலை 11 மணிக்கு அம்மன், சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டம்: நேற்று காலை 9 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில், பிரியாவிடையுடன், சோமநாதர், ஆனந்தவல்லியம்மன் தேரில் எழுந்தருளினர். பட்டர்கள் அம்பி, குமார், பரத்வாஜ் ஆகியோர் பூஜைகள் செய்ய, தேர் வடத்தை பிடித்து அனைவரும் இழுத்தனர். தேர் நான்கு ரதவீதிகளையும் சுற்றி காலை 11:30 மணிக்கு, நிலையை அடைந்தது. டி.எஸ்.பி., புருஷோத்தமன் தலைமையில், போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.