மடத்துக்குளம் : மடத்துக்குளம் அருகே கொழுமத்தில், கடந்த இரண்டு வாரங்களாக நடந்த கோட்டை மாரியம்மன் திருவிழா நிறைவுக்கு வருகிறது. மடத்துக்குளம் பகுதியில் கோடை காலங்களில் திருவிழாக்கள் நடப்பது பாரம்பரியமாக உள்ளது. ஆண்டு தோறும் நடக்கும் இந்த விழாவில் முக்கிய கோவில்களின் பட்டியலில் கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த திருவிழா கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. வரும்14ம் தேதி வரை நடக்கிறது. கடந்த மாதம் 22 காலை 8.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜையும் இரவு 11.00 மணிக்கு திருக்கம்பம் நடப்பட்டது. கடந்த மாதம் 23 முதல் மே 6., வரை தினசரி ஐந்துகால பூஜைகளும், அபிேஷக ஆராதனைகளும்,விசேஷ அலங்காரங்களும் நடந்தன.கடந்த எட்டாம் தேதி அதிகாலை 4.00 மணிக்கு திருக்கம்பம் அமராவதி நதியில் சேர்த்தல், சுவாமி மஞ்சள் நீராட்டுவிழா சுவாமி புறப்பாடு, 9ம் தேதி காலை 8.30 மணிக்கு பொதுமண்டகப்படி ஆகிய நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. வரும் 14ம் தேதி மாலை 6.00 மணிக்கு மகாபிேஷகம் நிறைவு ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. அம்மன்திருவீதி உலாவுக்காக சிங்கவாகனஅமைப்பு சிலையை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்துவந்தனர். இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்ததோடு, பலர் வழிபாடு செய்தனர். கோவில் திருவிழா நிறைவடைய இன்னும் இரண்டு நாட்கள் உள்ளநிலையில் பல்வேறு ஊர்களில் இருந்து பக்தர்கள் திரளாக வந்து வழிபட்டு செல்கின்றனர்.